
அழகான சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம், பிறருக்கு உதவும் எண்ணம். இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருமே விரும்புவார்கள். முன் பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில்கூட இவர்களின் உதவும் குணத்தால் இடம் பிடித்துவிடுவார்கள்.
பிறரிடம் நல்ல பெயர் எடுப்பது அத்தனை சுலபம் அல்ல. நாம் பிறருக்கு செய்த உதவி அது ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவர் மூலமாக நினைத்தே பார்க்காத அளவுக்கு நமக்கு ஏதோ ஒரு நல்ல பலனை அது தந்துவிடும். உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். எந்தவித பிரதிபலன் பாராமல் உதவ வேண்டும்..
ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பணம் படைத்த பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகுநேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். வாகனங்கள் செல்லும்போது அந்தப் பெண்மணி கை காட்டி நிறுத்தப் பார்த்தார் ஆனால் எந்த வாகனமும் நிற்காமல் சென்றது.
அந்த மனிதர் அருகில் சென்று என்ன பிரச்னை அம்மா? என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டார். கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன். காரில் உட்காருங்கள். நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் என்று டயரைக் கழட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு டயரை மாற்றினார். அந்தப் பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தரவேண்டும் என்று கேட்டார்.
நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன. அதில் இருந்து வரும் பணமே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.
துன்பமான நேரத்தில் என்னாலான உதவி உங்களுக்கு செய்தேன் அவ்வளவே… நீங்கள் பண உதவி செய் வேண்டும் என்றால் வேறு யாராவது ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.
அந்தப் பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பதுபோல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
டீ கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது. உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா? என்று கேட்டார்.
அந்த பணக்கார பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார், கடையில் அந்த பெண் தன் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு இருந்தது.
அதில் இருந்த ஆணின் படம் சற்று முன் தன் காரின் டயரை மாற்றியவர் என்று தெரிந்துகொண்டார். வெளிக்காட்டவில்லை
அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதையும் அவரிடம் பேசித் தெரிந்துகொண்டார்.
குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார். அந்த அம்மா டீ குடித்து விட்டு ரூ.5000/- ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்துவிட்டு சென்று விறுவிறுப்பாக காருக்கு சென்றுவிட்டார்.
அந்தப் பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதை எடுத்துக்கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார் அதற்குள் கார் கிளம்பிச் சென்றுவிட்டது.
கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டுச்சென்ற பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். பிரசவ செலவுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று புலம்பிக்கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்தப் பணத்தை காட்டவேண்டும் என்று அருகில் சென்றார்.
ஆனால் மிகுந்த அசதியால் தூங்கிக்கொண்டு இருந்தார் அவரது கணவர். உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் நமக்கு இருக்கவேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்யமுடியும். அதில் மகிழ்ச்சி காணமுடியும்.