
ஜப்பானியர் கடைப்பிடிக்கும் ஒரு பண்பு ஒமோயாரி என்று (Omoiyari) அழைக்கப்படுகிறது.
ஒமொய் என்றால் எண்ணம். யார் என்றால் கொடு அல்லது அனுப்பு என்று பொருள். ஆகவே ஒமோயாரி குறிப்பிடுவது என்னவெனில் உன் எண்ணங்களை அடுத்தவருக்குச் சற்று கொடு என்பதாகும். அதாவது அடுத்தவரிடம் புரிந்துணர்வுடன் இரக்கம் காட்டு என்பதே இதன் பொருள்.
ஒருவருக்கு ஏதோ ஒரு உதவி தேவைப்படுகிறது. அதை அவர் உங்களிடம் வந்து கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உடனடியாக நீங்களாகச் சென்று அவருக்கு உதவ வேண்டும். அதாவது பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வது தான் ஒமோயாரி!
எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருப்பது தான் ஒமோயாரி என்பதல்ல; சில சமயம் ஒன்றும் செய்யாமல் இருப்பதும், ஒன்றும் பேசாமல் இருப்பதும் கூடத் தான் ஒமோயாரி!
இதை ஜப்பானிய மொழியில் குக்கி வோ யோமு என்கின்றனர். அதாவது அறையைப் படிப்பது என்று பொருள். அதாவது ஒரு நிலைமையைப் பார்க்கிறோம். உடனே என்னவென்று புரிந்து கொள்கிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்கிறோம். அதன்படி நடக்க வேண்டும். அது தான் ஒமோயாரி!
தன்னலமில்லாமல் உதவும் இந்தப் பண்பு தியாக மனப்பான்மையின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. இதை அன்றாடம் கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கையில் அமைதியின் உச்சத்தை எட்டி விடுவார்கள்.
ஒமோயாரியின் சில அம்சங்களைப் பார்ப்போம்.
பொது இடங்களில் மெதுவாகப் பேசுதல்
குழுவாக வாழ வேண்டும் என்பதில் ஜப்பானிய மக்கள் பெரிதும் குறியாய் இருப்பவர்கள். பொது இடங்களில் ஆஹா ஊஹூ என்று கூச்சல் போட்டுப் பேசினால் அது அடுத்தவரை பாதிக்கும் என்பதைத் தெரிந்து ஜப்பானியர் எதிரில் இருப்பவர் கேட்கும் அளவிற்கே மெதுவாக மென்மையாகப் பேசுவார்கள். பஸ்ஸிலோ, ரயிலிலோ போனை சைலண்ட் மோடில் வைத்து விடுவார்கள்.
அயல் நாட்டு மொழி பயன்படுத்தல்
அடுத்த நாட்டிலிருந்து வந்த அயல்நாட்டாரிடம் தங்கள் மொழியில் பேசி அவர்களைக் குழப்பக்கூடாது என்பதில் ஜப்பான் மக்கள் தீவிரமாக இருப்பவர்கள். ஆகவே உடனடியாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பார்கள்.
கோவிட் காலத்தில் வாக்சினேஷன் படிவத்தை 16 மொழிகளில் அடித்து விநியோகித்தது ஜப்பானிய அரசு.
பொது இடங்களில் சுத்தம்
பொது இடங்களில் சாப்பிட்டால் உடனடியாக அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்வது ஜப்பானியரின் வழக்கம். ரெஸ்ட் ரூம் சென்றாலும் சரி, அதை அடுத்தவர் நுழைந்து பார்க்கும் போது அப்போது தான் அது துப்புரவாளரால் மிக அருமையாகச் சுத்தப்படுத்தப்பட்டது என்பது போலத் திகழும். அரங்கத்தில் நுழைந்தால் அடுத்தவருக்கு பாதிப்பு இல்லாமல் அமைதியாக அமர வேண்டும். வோர்ல்ட் கப் 2018ல் தங்கள் தங்கள் இருக்கையைத் தாங்களே அவர்கள் சுத்தப்படுத்தியதைப் பார்த்து உலகமே வியந்தது.
கடைகளில் ஒமோயாரி
இரண்டு கடைகளில் சாமான்களை வாங்கிக் கொண்டு மூன்றாவது கடையில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால் காஷியர் உங்களை ஒரு நோட்டம் விடுவார். உங்கள் கையில் இருக்கும் மற்ற கடைகளில் வாங்கிய சிறு சிறு பைகளைப் பார்ப்பார். உடனே அனைத்தையும் போடும் அளவிற்கு ஒரு பெரிய பையைத் தருவார்.
சுலபமாக ஒரே பையில் எல்லாவற்றையும் கொண்டு செல்லலாம் இல்லையா!
இப்படி ஒவ்வொரு விஷயமாகச் சொல்லிக் கொண்டே போக முடியாது.
ஒமோயாரி என்பது ஒரு வாழ்க்கை முறை; அவ்வளவு தான்.
அது இல்லத்தைச் சுத்தமாக்கும்; உள்ளத்தைச் சுத்தமாக்கும். ஊரைச் சுத்தமாக்கும்.
அதை அனைவரும் கடைப்பிடித்தால் உலகத்தையே சுத்தமாக்கும்.
கருணை நிறைந்த உலகில் கவலை தான் ஏது; உதவி கேட்டுக் கூவ வேண்டும் என்ற அவல நிலை தான் ஏது?