
டோஜன் ஜெஞ்சி (Dōgen Zenji) என்பவர் 'சோடோ வழிமுறை' என்ற ஒரு புது வழிமுறையை ஸ்தாபித்த ஜப்பானிய ஜென் மாஸ்டர் ஆவார். (தோற்றம் 26-2-1200 நிர்வாணம் 22-9-1253)
இவரிடம் ஏராளமான சீடர்கள் 'ஜாஜென்' என்னும் தியான முறையைக் கற்க வருவதுண்டு.
ஒரு சமயம் பதினேழாவது தலைமுறை குரு ஒருவர் தனது சீடன் ஒருவனுடன் நடந்து கொண்டிருந்தார். அருகில் இருந்த ஆலயத்தில் நான்கு மூலைகளிலிருமிருந்து மணிகள் தொங்க விடப்பட்டிருந்தன. அவை ஒலித்துக் கொண்டிருந்தன.
குரு தனது சீடனிடம் கேட்டார்: “அப்பனே! எது ஒலிக்கிறது? காற்றா? மணிகளா?”
சீடன் உடனே பதில் சொன்னான், ”ஐயனே! காற்றும் இல்லை; மணிகளும் இல்லை. மனம் தான் ஒலிக்கிறது!”
இந்த பதிலால் குரு பெரிதும் சந்தோஷப்பட்டார்.
காற்றா, மணிகளா அல்லது இரண்டுமா?
எதுவுமில்லை. மனம் தான்!
"அப்படியானால், மனம் என்றால் என்ன?"
இதை குரு கேட்கவே சீடன் உடனே பதில் கூறினார்: “பேரமைதி! சஞ்சலமற்ற நிலை!”
இதனால் இன்னும் அதிக சந்தோஷப்பட்டார் குரு.
சீடன் மனம் என்றால் என்ன என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டான். அது அகண்டமானது.
இந்த ஆதிமூலமான ஒரு நிலை தான் பிரிக்கமுடியாத நிலையான ஒன்று.
இந்தச் சம்பவத்தைத் தன் சீடர்களுக்குக் கூறிய டோஜன் ஜெஞ்சி, “காற்று அடிக்கிறது; மணிகள் அடிக்கின்றன. ஒலிப்பது ஒலித்துக் கொண்டிருக்கிறது" என்றார். RINGING RINGING என்று அவர் கூறியதை சீடர்கள் புரிந்து கொண்டார்கள். எந்த வித தடையுமின்றி மணிகள் ஒலிக்கின்றன எல்லையற்ற பேரமைதியில்!
பேரமைதி என்பது இயக்கம் இல்லாத ஒரு மந்தமான நிலை அல்ல! அது உயிர்த்துடிப்புள்ள அகண்டமான ஒரு பெரும் நிலை!
சமுதாயத்திலிருந்து விலகி நின்று ஒருவன் இந்த பேரமைதியைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை!
வாழ்க்கையில் உள்ளார்ந்து எப்போதும் ஒருவன் அனுபவிக்க வேண்டிய நிலை இது!
சமுதாயத்திலிருந்து விலகி ஒருவன் தனியாக இருந்து எங்கு சென்றாலும் அது அமைதியைத் தந்து விடாது.
மலையின் உச்சிக்குச் சென்று வசிப்பது பேரமைத்திக்கான ஒரு வழியாகத் தோன்றும்.
அது சூழ்நிலைகளை நம் போக்கில் வரச் செய்வதற்கான ஒரு வழி போலத் தோன்றலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல.
சமுதாயத்தில் மக்களுடன் இணைந்து வாழ்ந்து பேரமைதியை உணர்ந்தால் அது தான் உண்மையான பேரமைதி.
ஆகவே மக்களுடன் இணைந்து இதைக் கொள்ள உதவுவது தான் ஜாஜென் என்னும் தியானம்!
ஆரவார சூழ்நிலை இருந்தாலும் மனத்தின் உள்ளே பேரமைதி எப்போதும் இருப்பதே அதன் உச்சகட்ட பயனாகும்.
இதைத் தான் டோஜன் ஜெஞ்சி வலியுறுத்தினார்!