வாழை வளைந்திருப்பதேன்? வாழைப்பழம் கற்பிக்கும் பாடம்!

Why is banana curved?
Why is banana curved? Image credit: AI image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 

மனித ஆரோக்கியத்திற்குப் பழங்களின் பங்கு மகத்தானது. அதனால்தான் முக்கனிகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. மா, பலா, வாழை என்ற ஆர்டரில், வாழைக்கு மூன்றாவது இடம் தான் என்றாலும் அனைத்து மங்கல நிகழ்வுகளிலும், ஆன்மிக விழாக்களிலும் அசைக்க முடியாத முதலிடம் வாழைப்பழத்துக்குத்தான்!

ஆனால் 'மற்ற பழங்களெல்லாம் நிமிர்ந்திருக்கையில், வாழை மட்டும் வளைந்திருப்பதேன்?’ (Why is banana curved?) என்று என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா?

’அட என்னங்க நீங்க? அதையே உரிச்சிச் சாப்பிட நேரமில்லாம யாராவது உரிச்சிக் கொடுக்க மாட்டாங்களா? என்று பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா?’ என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் முனகுவது எனக்கும் கேட்கத்தான் செய்கிறது. நிதானமில்லாம எப்பொழுதும் பறக்கிறதும் நியாயமில்லை அல்லவா? வளைந்திருக்கும் வாழைப்பழம் நமக்கு வாழ்க்கைப் பாடத்தையும் போதிக்கிறதை நாம் உணர வேண்டாங்களா?

எல்லாப் பழங்களும் புவி ஈர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கியே, அதாவது தரையில் முகம் பார்த்தே இருக்கும். ஆனால் வாழைப்பழம் மட்டும் வானத்தில் முகம் பார்த்து, கதிரவனுடன் கலந்துரையாடும்.

உயிரினங்கள் வாழ்வதற்கு உற்ற துணை சூரியக் கதிர்கள் என்பது உலகறிந்த உண்மை. வாழைப்பழம் அந்த வசதியை அறிந்ததால் தானோ அனைத்திலும் முந்தி நிற்கும் அருளைப் பெற்றுள்ளது!

இதையும் படியுங்கள்:
MOTIVATION STORIES : திருப்தியான வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை! எப்படி சார்?
Why is banana curved?

தாரில் தொங்கும் பழங்கள் மேல் நோக்கிப் போகாமல், கீழ் நோக்கியே நிமிர்ந்து நின்றால் என்ன ஆகும்? புவி ஈர்ப்பு விசை காரணமாக, தாருடன் சேர்ந்து மரமுங்கூட விழுந்து விட நேரலாம். அதனைத் தவிர்ப்பதற்காகவே, வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காகவே (survival) வளைந்து அதுவும் மேல் நோக்கிப் பார்க்கிறது.

அதோடு மட்டுமல்ல, வாழைத் தாரில் பழங்கள் நெருக்கமாக இருக்கின்ற காரணத்தால், கீழ் நோக்கியே இருந்தால் வளர்வதற்கு வேண்டிய கதிரவன் ஒளியை எல்லாக் காய்களும் முழுமையாகப் பெற முடியாது. காற்றோட்டமும் தடைப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் ‘எதிர்மறை புவி ஈர்ப்பு விசை இயக்கம்’ (Negative Geotropism) எதிர்த்து வளர, வழி ஏற்படுத்திக்கொள்கிறது. வாழை வளர்ந்து காயாகிப் பழுத்து நமக்கு உதவிட, இதுதான் வழங்கப்பட்டுள்ள பொறியியல் தீர்வு (Engineering Solution).

சரி! இது போதிக்கும் வாழ்க்கைத் தத்துவம் என்னவென்று தெரிந்து கொள்ளத்தானே வேண்டும். நேராக, உறுதியாக (rigid) இருக்க வேண்டியதுதான். அதே சமயத்தில் வளைய (flexible) வேண்டிய இடத்தில் வளையவும் கற்றால் தான் வாழ்க்கை எளிதாகும். வளைதலுக்கும், அடிமைத்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இதையும் படியுங்கள்:
உங்கள் Motivation-ஐ குறைக்கும் 4 விஷயங்கள் என்ன தெரியுமா? 
Why is banana curved?

வளைந்து,நெளிந்து செல்லும் பாதைதானே நம்மை ஊர் கொண்டு சேர்க்கிறது! அடுத்தமுறை வாழைப்பழத்தைக் கையில் எடுக்கையிலேயே வளைவு ஞாபகத்திற்கு வந்து விடுமல்லவா?வளைந்து வாழவும் கற்றால் வாழ்க்கை உற்சாகமாகக் கழியும் தானே! உற்சாகமும் அமைதியுந்தானே பிறவியை நிறைவடையச் செய்வன!

logo
Kalki Online
kalkionline.com