
நவீன உலகில், நம் அனைவருக்கும் நேர மேலாண்மை என்பது ஒரு பொதுவான சவாலாகவே இருக்கிறது. சிலர் நிறைய வேலைகளைச் செய்து முடிப்பதையும், வேறு சிலர் எதையுமே முடிக்க முடியாமல் இருப்பதையும் பார்த்திருப்போம். இதற்குக் காரணம், அவர்கள் நேரத்தைச் செலவிடும் முறைதான்.
இதை எப்படி சமாளிப்பது? எதை முதலில் செய்வது, எதை பிறகு செய்யலாம்? என்று புரியாமல் பலரும் இருப்பர். இதற்கு தீர்வாக ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் அனைவருக்கும் உதவுகிறது.
நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவசரம் ஆகியவற்றைப் பொறுத்து நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் ஒரு அட்டவணை தான் இது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிவைட் டி. ஐசன்ஹோவர், "முக்கியமானது அவசரமானது அல்ல; அவசரமானது முக்கியமானது அல்ல" என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு இந்த முறை உருவானது.
ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் எப்படி செயல்படுகிறது?
உங்கள் வேலைகளை நான்கு கட்டங்களுக்குள் பிரித்துப் பார்ப்பதுதான் ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ். இதோ அந்த நான்கு கட்டங்கள்:
1. முக்கியமானவை & அவசரமானவை (இப்போதே செய்யுங்கள்)
இந்தக் கட்டத்தில் உள்ள வேலைகள் மிகவும் முக்கியமானவை, மேலும் உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை. இவற்றைத் தள்ளிப் போடவே முடியாது.
எடுத்துக்காட்டாக: இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டி ஒரு முக்கியமான அலுவலக வேலை; உங்கள் குடும்பத்தில் அவசரமான மருத்துவத் தேவை; இன்றே பதிலளிக்க வேண்டிய முக்கியமான மின்னஞ்சல். இந்த வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும்.
2. முக்கியமானவை & அவசரம் இல்லாதவை (திட்டமிடுங்கள்)
இந்த வேலைகள் மிகவும் முக்கியமானவை, ஆனால் உடனடியாகச் செய்ய வேண்டிய அவசரம் இல்லை. எதிர்கால வெற்றியையும் வளர்ச்சியையும் இவை உறுதி செய்யும்.
* எடுத்துக்காட்டாக: உங்கள் புதிய திறமையை வளர்த்துக் கொள்வது; நீண்டகால திட்டமிடல்; எதிர்காலத்திற்கான முதலீடு, உடற்பயிற்சி, குடும்பத்துடன நேரம் செலவிடுவது.
இந்த வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி திட்டமிட்டுச் செய்ய வேண்டும். இவைதான் பெரும்பாலும் நாம் தள்ளிப் போடும் வேலைகள், ஆனால் இவையே வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் எனலாம்.
3. முக்கியமற்றவை & அவசரமானவை (பிறரிடம் ஒப்படைத்து விடுங்கள்)
இந்த வேலைகள் அவசரமானவை, அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டும், ஆனால் அவை உங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்காது.
* எடுத்துக்காட்டாக: உங்களுக்கு வரும் சில அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, அலுவலக கூட்டங்களை ஏற்பாடு செய்வது போன்றவை.
இது போன்ற அவசர வேலைகளை மற்றவர்கள் யாரேனும் அவற்றைச் செய்ய முடியுமா என்று பார்த்து அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
4. முக்கியமற்றவை & அவசரமற்றவை (தவிர்த்து விடுங்கள்)
இந்த வேலைகள் முக்கியமும் இல்லை, அவசரமும் இல்லை. இவை பொதுவாக உங்கள் நேரத்தை வீணாக்கும் செயல்களாக இருக்கலாம்.
* எடுத்துக்காட்டாக: தேவையற்ற சமூக வலைத்தளப் பயன்பாடு; அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவை.
இந்த வேலைகளுக்கு மிகக் குறைவான நேரம் செலவிடுவது சிறந்தது.
இலக்கை அடைய ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் எப்படி உதவும்?
கவனம் கூடும்: எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்று பிரித்துப் பார்ப்பதால், உங்கள் கவனத்தை முக்கியமான வேலைகளில் செலுத்த முடியும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
திட்டமிடல் மேம்படும்: "முக்கியமானவை & அவசரம் இல்லாதவை" என்ற இரண்டாவது கட்டத்தில் உள்ள வேலைகள்தான் உங்கள் நீண்டகால இலக்குகளை அடைய உதவும். இந்த மேட்ரிக்ஸைப் பயன்படுத்தும்போது, திட்டமிடலின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம் குறையும்: அவசரமான, முக்கியமான வேலைகளை உடனே முடிப்பதால், கடைசி நேரப் பதற்றம் குறையும். அதே நேரத்தில், முக்கியமானவை ஆனால் அவசரமற்ற வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுவதால், அவை அவசரமாக மாறும் நிலையைத் தவிர்க்கலாம்.
வேலைத்திறன் அதிகரிக்கும்: எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவு இருப்பதால், ஒரு நாளைக்கு நீங்கள் செய்து முடிக்கும் வேலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சரியான முடிவுகளை எடுக்க உதவும்: ஒரு புதிய வேலை வரும்போது, அது எந்தக் கட்டத்தில் வரும் என்று யோசிப்பதன் மூலம், அதை நீங்கள் செய்ய வேண்டுமா, தள்ளிப் போடலாமா அல்லது வேறு யாரிடமாவது ஒப்படைக்கலாமா என்று விரைவாக முடிவெடுக்கலாம்.
ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸின் உதவியுடன், முக்கியமான வேலைகளுக்கு கவனம் செலுத்தி, அவசியமற்றவற்றை தவிர்த்து உங்கள் நேரத்தை சிறப்பாக திட்டமிடலாம். இது உங்கள் வேலைத்திறனை உயர்த்தி, மனஅழுத்தத்தை குறைத்து, இலக்குகளுக்குச் செல்லும் பாதையை தெளிவாக்கும் ஒரு எளிய கருவியாக உதவும்.