
நாம் எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தால் திட்டத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் நம் இலக்கை மாற்றக்கூடாது. சிலர் இலக்குகளை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் அதை நோக்கிச் செல்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது இலக்குகளை அடைய முடியாமல் போய்விடும். தள்ளி போடுவதற்கான காரணம் பயம் அல்லது எதிர்பார்ப்புகள் அதிகமாகி அதை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற தயக்கம் தான் காரணம்.
இலக்கை அடைய முதலில் நாம் நம் இலக்கை தெளிவாக வரையறுத்து அதற்கான திட்டத்தை உருவாக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். அத்துடன் நேர மேலாண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். இலக்கை எளிதில் அடைய முக்கியமாக நம்மை நாமே ஊக்கப் படுத்திக் கொண்டு செயல்பட்டால் விரைவில் நாம் எண்ணிய இலக்கை அடையலாம். எண்ணிய இலக்கை அடைய எவ்வளவு தடைகள் வந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வெற்றி கிடைக்கும். அதற்கு முதலில் நாம் நேர்மறையாக சிந்திக்க பழக வேண்டும்.
திட்டத்தை வகுத்து அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை என்றால் சிறிது மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் நாம் அடைய வேண்டிய இலக்கை மாற்றக்கூடாது. இதற்கு முக்கியமான தேவை தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நம்மால் முடியும் என்று திடமாக நம்புவதும், சோர்ந்து விடும்பொழுது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வதும் அவசியம். இலக்கை அடைய திட்டம் வகுத்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட கடினமாக உழைக்கவும் தயங்க கூடாது.
திட்டங்களை வகுக்கும் பொழுதே சிலர் அதை செய்யாமல் இருப்பதற்காக காரணங்களை தேடுவார்கள். சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்ப்பார்கள். இது சரிவராது என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். தோல்வியைப் பற்றிய பயம் வந்து திட்டத்தை தள்ளி போட பார்ப்பார்கள். பயம் என்பது நமக்கு நன்கு தெரிந்த செயல்களைக் கூட சிறப்பாக செய்ய விடாமல் தடுக்கும். எனவே வாழ்வில் தோல்வியும் வெற்றியும் ஒரு அங்கம் தான். எனவே தோல்வியை பற்றிய பயம் தேவையில்லை என்று மனதிற்கு சொல்லிக்கொள்ள புது தெம்பு பிறக்கும்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. எப்படி நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதோ அது போல் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களும், எதிர்மறையான எண்ணங்களும் இருக்கும். இதில் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்திக் கொண்டு திட்டங்களை வகுத்து செயல்பட நாம் எண்ணிய இலக்கை எளிதில் அடையலாம்.
இலக்குகள் நம் அனைவருக்குமே உள்ளன. வேலையில் பதவி உயர்வு பெறுவதாக இருந்தாலும் சரி, வகுப்பில் முதலிடம் பெறுவதாக இருந்தாலும் சரி, குடும்பத்தை உருவாக்குவதாக இருந்தாலும் சரி நம் இலக்கை அடைவதற்கு கடினமாக உழைப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக உழைப்பதன் மூலம் நம் வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கலாம்.
அதற்கு ஸ்மார்ட் இலக்குகளை அமைக்கலாம். ஸ்மார்ட் என்பது வலுவான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அவற்றை நியாயமான காலக்கெடுவிற்குள் அடைய முயற்சிப்பதுமாகும்.