
சிலர் அன்பு மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நேரம் வரும் பொழுது நெகிழ வைப்பார்கள். இன்னும் சிலர் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். ஆனால் தக்க சமயத்தில் சரியாக நடந்து கொள்ளாமல் விலகி விடுவதும் உண்டு. ஆனால் எப்பொழுதும் மனதை நெகிழவைப்பது எது என்றால் இவர் இப்படி இருக்க மாட்டார் என்று நினைக்கும் நபர் அப்படியே அதற்கு மாறாக ஒரு செயலை செய்யும்பொழுது எல்லோர் நினைவிலும் நின்று நிழலாடுவார்.
விருந்து ஒன்றுதான். ஆனால் அதை காகமும் சேவலும் பார்க்கும் விதம்தான் வேறு வகையானது. காகம் விருந்து வரப்போகிறது. நமக்கு விருந்து கிடைக்கும் என்று கரைந்து கரைந்து தன் கூட்டத்தினரை அழைக்க காத்திருக்கும். ஆனால் சேவலோ நாம் விருந்தாகப் போகிறோமே என்று மனதில் கொதித்துக் கொண்டிருக்கும். இதுதான் இரு வேறு பறவைகளின் பண்பு. இந்தப் பண்புக்கு வித்திடுபவர்கள் வேறு யார் நாம்தான்.
என் தோழி முதன் முதலாக சம்பளம் வாங்கியதும் அவளின் குடும்பத்தாருக்கு விருப்பப்பட்ட பொருளை வாங்கி தருவதற்கு கடைக்கு செல்லும்பொழுது என்னையும் அழைத்து இருந்தாள். எனக்கும் அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தது. அப்பொழுது கடைக்குச் சென்ற அவள் முதன்முதலாக மிகவும் அழகான விலை உயர்ந்த ஒரு புடவையை எடுத்தாள்.
மற்றவர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரி விலைக்கு சம்பளத்திற்கு ஏற்றார்போல் துணிமனிகளை வாங்கினாள். அந்த விலை உயர்ந்த புடவை யாருக்கு என்று கேட்டபொழுது கண்ணீர் மல்க இது என் பெரிய அண்ணிக்குத்தான் என்று கூறினாள். அவள் அப்படி சொன்னதும் எனக்கு மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஏனெனில் அவள் அவ்வப்பொழுது அவள் அண்ணி உடன் பேசாமல் இருப்பது உண்டு. அவளின் அண்ணியும் அதை பெரிதுபடுத்தாமல் தினசரி சாப்பாடு கட்டி தருவதில் இருந்து துணிமணிகளை துவைத்து தருவதுவரை ஒரு தாய்போல் நடந்து கொள்வார். இவரிடம் ஏன் இவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று என் தோழியை நான் நினைத்தது உண்டு.
நான் எத்தனையோ கஷ்டங்களை கொடுத்திருக்கிறேன் என் அண்ணிக்கு. ஆனால் அவர் ஒரு பொழுதும் என்னை வித்தியாசமாக பார்த்ததில்லை. எனது அண்ணனும் எங்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தருவார். ஆனால் என் அண்ணிக்கோ அவருக்கோ நல்ல விலை உயர்ந்த எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொண்டதே இல்லை. என் அண்ணியும் அதைப் பற்றி விசாரித்ததோ குற்றம் குறையாக பேசியதோ இல்லை. அப்பொழுது நான் கடைசிவரை என் அண்ணிக்கு இதுபோல் எதை வாங்கி கொடுத்தாலும் உயர்வாகவே வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அதனால்தான் அவருக்கு இப்படி வாங்கியிருக்கிறேன் என்று கல்மனம் கரைய, கண்களும் பணிக்க கூறினாள். அவளின் செயல்கள் அப்போதைய பார்வைக்கு வேறுபட்டிருந்தாலும் எண்ணத்தில் சில்லறை புத்தி இல்லை என்பதை புரிந்து நெகிழ்ந்து போனேன்.
நான் மட்டுமா அவளில் குடும்பத்தார் உட்பட அண்ணியும் தான். இதுபோல் உணர்ந்து, மகிழ்ந்து, நெகிழ்ந்து போகும் தருணங்கள்தான் வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.
சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்லை!சந்திக்காத பிரச்னை என்றும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை...!