இந்தக் குணம் கோபத்தை விடக் கொடியது. அது, உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்மில் பல பேரிடம் இருக்கும் முக்கியமான குணங்களில் ஒன்று மற்றவர்கள் என்ன நினைக் கிறார்களோ அதற்கேற்றார்போல நாமும் நடந்து கொள்வது, நம்மை மாற்றிக்கொள்வது. இந்தக் குணம் நம்மில் பல பேருக்குத் தெரிந்தோ தெரியாமலோ உண்டு.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளவோ ஒப்புக்கொள்ளவோ மனம்தான் இல்லை. இப்படிப்பட்ட குணமுடைய மக்களுக்கு சவுக்கடியாக ஒரு குட்டிக்கதை இங்கு பார்ப்போம்.
காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தக் காட்டின் வழியாக சில வழிப் போக்கர்கள் சென்றார்கள். அந்த வழிப்போக்கர்கள் பெரும்பாலும் அந்தக் காட்டிற்கு அருகே வாழக்கூடிய மக்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் கடந்து செல்லும் பாதையில் இந்த முனிவர் நீண்ட காலமாகத் தவங்களும் உபதேசங்களும் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த முனிவர் உபதேசம் செய்துகொண்டிருக்கும்போது வழிப்போக்கர்களுள் ஒருவன், முனிவருக்கு எதிரில் வந்து அவர் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டுச் சென்றான். ஆனால், அந்த முனிவர் சிறிதும் சலனமின்றி எப்போதும் செய்துகொண்டிருக்கும் செயலையே செய்தார்.
அந்த வழிப்போக்கனுக்கு கோபம் கலந்த குழப்பம் மனதில் உண்டாயிற்று. காரணம் தனது இழிவான செயலுக்கு அந்த முனிவர் தன்னைக் கோபத்தால் திட்டவுமில்லை, ஒரு வார்த்தைகூட ஏனென்று கேட்கவுமில்லை. இந்த ஒரு செயல் அவனுக்குச் சிறிது நாட்களில் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் மனம் கேட்காமல் நேரே முனிவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டான்.
முனிவரோ முற்றும் துறந்தவர்; முக்காலமும் உணர்ந்தவர். அதனால் அவன் செய்த செயலை மன்னித்து விட்டுவிட்டார். அவர் மன்னிப்பு வழங்கிய பிறகும் அந்த வழிப்போக்கனுக்கு அங்கிருந்து செல்ல மனமில்லை.
அவன் தயங்கித் தயங்கி முனிவரிடம் “சுவாமி நான் உங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டேன். ஆனால், நீங்கள் கொஞ்சம் கூட கோபமே படவில்லையே எப்படி?” என்று கேட்டான்.
அதற்கு அந்த முனிவர் “மற்றவர்கள் நான் கோபப்பட வேண்டும் என்று நினைப்பதற்காகவெல்லாம் நான் கோபப்பட மாட்டேன். நான் கோபப்பட வேண்டுமா, வேண்டாமா என்று நான்தான் முடிவு செய்யவேண்டும். மற்றவர்கள் கற்பனையில் என்னால் ஒரு காலமும் வாழ முடியாது” என்று அவனிடம் கூறினார். இதனால் அவன் தன் தவற்றை உணர்ந்து மனம் திருந்தி வீடு திரும்பினான்.
இந்தக் கதையில் முனிவர் கூறியது போல் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தேவை, என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மற்றோர்கள் கற்பனையில் நீங்கள் வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நினைத்தார் போல் கற்பனையில் கூட வாழ முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.