ஒவ்வொரு புதிய நாளின் காலைப் பொழுதிலும் நீங்கள் வீட்டுக்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும்போது உங்கள் மனதுக்குள் தோன்றும் நினைப்பு என்ன?
'சூரியன் உலகையே பிரகாசமாக்கி வைக்கிறது. எங்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. நாமும் இந்த உற்சாக நதியில் நீந்த வேண்டும்' என நீங்கள் நினைத்தால் ஓகே!
ஆனால் இதற்கு பதிலாக, 'காலையிலேயே இவ்வளவு புழுக்கமாக இருக்கே? என்ன கொடுமை இது? இந்த நாளை எப்படி ஓட்டுவது? வீட்டுக்கு திரும்பி வருவதற்குள் ஒரு வழியாகி விடுவோம் போலிருக்கிறது...' என நீங்கள் நினைத்தால் உங்களிடம் மிகப் பிரச்சனை இருக்கிறது. ஆம் .. நீங்கள் தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறீர்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதே இந்த உலகத்தில் பார்க்கிறீர்கள். உங்கள் நினைப்பு மாறினால் இந்த உலகம் வேறு விதமாக உங்களுக்கு தெரியும்.
முன்னேற்ற வாய்ப்புகள்:
ஆபீஸில் உங்களுக்கு சமமாக இருப்பவருக்கு உங்களைவிட அதிக சம்பளம் உயர்வு கொடுக்கிறார்கள். உடனே உங்கள் பக்கம் உள்ளவர் சிரித்து எழுந்து குறை சொல்வார். அவரை அப்படியே எழுப்பி வெளியே நிறுத்துங்கள். தோல்விகள் என்பவை உங்களை முடக்குவதற்கு கடவுள் அனுப்பிய அஸ்திரங்கள் அல்ல. உலகத்தைப் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பதை உணருங்கள்.
உங்களால் முடியும்:
உங்களுக்கு நீங்களே நல்ல விமர்சகனாக மாறுங்கள். உங்களுக்கு சமமாக இருப்பவர் அதிக சம்பளம் உயர்வு பெற்றதற்கு அவரது உழைப்பே காரணம். நீங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. நீங்களும் ஒன்றும் குறைந்தவர் அல்ல, ஏதோ கவனக் குறைவாக இருந்து விட்டீர்கள்! இப்போது முதல் இரண்டு மடங்காக உழைத்து உங்கள் திறமையை நிரூபித்து அடுத்த வருடம் அவரைத் தாண்டி சம்பளம் உயர்வு பெற உங்களால் முடியும். அதற்கான தூண்டுதல் தான் இப்போது நடந்த சம்பவம் என நினைத்துக் கொள்ளுங்கள்.
தனித்திறமையை உருவாக்குங்கள்:
இதற்கு முன்பாக பலரும் பல தடவை சொன்ன விஷயம்தான். திரும்பவும் சொல்வதில் தப்பில்லை. இந்த உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதரும் பிரத்யேகமானவர்கள். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கிறது. யாரும் யாருக்கும் இணையோ யாரும் யாரைவிட தாழ்ந்தவரோ இல்லை. எனவே அடுத்தவர்களுடான ஒப்பீடுகளை தவிர்த்து விடுங்கள். இந்த உலகில் இருக்கும் மற்றவர்களைப் போல நீங்களும் திறமைசாலியா? என பார்க்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவராக தெரிகிறீர்கள் என்பதை பாருங்கள்.
உற்சாகமாக இருங்கள்:
தினமும் டைரியில் எழுதுங்கள். உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களை, அந்த தினத்தில் நீங்கள் செய்த சாதனைகளை நீங்கள் புரிந்து நற்செயல்களை பற்றி, எழுதுங்கள். இதற்காக உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். தாழ்வு மனப்பான்மை உங்களை வாட்டி விரக்தியில் தள்ளும்போது இந்த டைரியை எடுத்து படித்து உங்களை உற்சாகமாக்கிக் கொள்ளுங்கள்.
தனித்தன்மையுடன் இருங்கள்:
உங்களை நீங்கள் நேசியுங்கள். உரிய மரியாதையும் கொடுங்கள். உங்களுக்கு நீங்களே மரியாதை கொடுக்கவில்லை என்றால், மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படி உங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள். அதே மனநிலையோடு அதே உடல் அமைப்போடு உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தில் ஏதோ ஒரு தனித்தன்மை மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இருக்கக்கூடும். மற்றவர்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் யோசிக்கும் திறமையை உங்கள் மூளை பெற்றிருக்கலாம். நீங்கள் எங்கு இருந்தாலும் யாராக இருந்தாலும், மற்ற யாரிடம் இல்லாத ஒரு தனித்தன்மை உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். அதை கண்டுபிடித்து விட்டால் உங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்கிவிடும். நான் ஜெயிக்கப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.