பல காலமாக கர்ப்பிணிப் பெண்களிடம் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதாவது, கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதுதான். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
Crocus sativus என்று சொல்லப்படும் குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. குங்குமப்பூவின் விலை ஒரு கிலோ 3 முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது குங்குமப்பூ சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்று ஹைப் செய்யப்படுவதேயாகும்.
பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், குங்குமப்பூ கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வரும் Mood swings, டென்ஷன், பதற்றம் ஆகியவற்றை குறைக்கும். மேலும், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் என்பதாகும். ஆனால், குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று எந்த மருத்துவத்திலும் சொல்லப்படவில்லை. அதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
குங்குமப்பூவில் Saffronal, crocin போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சில ஆராய்ச்சிகளில் குங்குமப்பூ Serotonin அளவை குறைப்பதால், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் Mood swings ஐ குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் நிறத்தை பெற்றோர்களின் மரபணு மட்டுமே நிர்ணயம் செய்கிறது. கேரட், குங்குமப்பூ, மாதுளை போன்றவற்றை எடுத்துக்கொள்வதால் குழந்தையும் சிவப்பாக பிறக்கும் என்று நினைப்பது தவறாகும். இதுபோன்ற பொருட்களில் இருக்கும் பிக்மெண்ட்கள் நம் இரத்தத்தில் கலக்காது. நம்முடைய கழிவுகள் மூலம் வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குழந்தைகளை சென்றடையும் என்பது சாத்தியமற்றது.
எனவே, சிவப்பாக இருக்கும் பழங்களை சாப்பிட்டால் குழந்தை சிவப்பு நிறமாக பிறக்கும் என்று நினைப்பது உண்மையில்லை. குடும்பத்தின் மரபணு மட்டுமே குழந்தையின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதால் குழந்தைகளின் நிறத்தை மாற்ற முடியும் என்று நினைப்பது தவறாகும்.
சிவப்பாக இருந்தால்தான் குழந்தை அழகு என்று நினைப்பது நம்முடைய மனதைப் பொறுத்தது. அந்த எண்ணத்தில் இருந்து வெளிவந்தாலே அதிக விலை கொடுத்து குங்குமப்பூவை வாங்கி சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்.