
‘நாளை என்பது நரசிம்மரிடம் கிடையாது’ என்பார்கள். அப்படிப்பட்ட நரசிம்மர் அருளாட்சி செய்யும் மிகப் பழைமையான திருக்கோயில் சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது. அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாகக் கருதப்பட்ட சென்னை போரூர் அருகே உள்ள ராமாபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் மக்கள் அனைவரையும் ஈர்த்த வண்ணம் உள்ளது.
ஒரு காலத்தில் மிகவும் பாழடைந்த நிலையில், யாரும் வருகை தராத நிலையில் இருந்த இக்கோயில் இப்பொழுது பக்தர்களின் முயற்சியால் செழிப்பான நிலையிலும், தீவிர வழிபாட்டு மையமாகவும் உள்ளது. கோயிலுக்கு செல்லும் தெரு பண்டைய வரலாற்றிலிருந்து ஐயங்கார் தெரு என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக இங்கு குடியேறி இருந்ததை வெளிப்படுத்துகிறது.
இப்பகுதியில் ஒரு பெரிய துளசி தோட்டம் இருந்ததால் இப்பகுதி முழுவதும் பிருந்தாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நரசிம்ம பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவராக போற்றப்படுகிறார். ஆனந்த விமானத்தின் கீழ் அமர்ந்து அருள்புரியும் நரசிம்மரின் மேல் இரண்டு கைகள் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இடது கை மடியில் அமர்ந்துள்ள லட்சுமி தேவியின் இடுப்பை சுற்றியும் உள்ளது. வலது கை அபய ஹஸ்தமாகக் கொண்டு காட்சி தருகிறார். மிகவும் வரசித்தியான நரசிம்மப் பெருமாள் 38 சாளக்ராம மாலையை அணிந்துள்ளார். அவற்றில் 25 சாளக்ராமங்கள் ஸ்ரீ சந்தான கோபால சாளக்ராமங்கள். மீதமுள்ளவை லக்ஷ்மி நாராயண சாளக்ராமங்கள்.
மகாமண்டபத்தில் த்வஜஸ்தம்பம், பலி பீடம் மற்றும் கருடன் ஆகியவை உள்ளன. மகாமண்டப தூண்களில் அஷ்ட லட்சுமிகளும், அனந்த சயன பெருமாளும் அழகுற வீற்றிருக்கின்றனர். மகாமண்டபத்தின் நுழைவாயிலில் தும்பிக்கை ஆழ்வார் மற்றும் நாகர் சன்னிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் அமிர்தவல்லித் தாயார் சன்னிதியும், ஆஞ்சநேயர் சன்னிதியும் அமைந்துள்ளது.
குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதியர் இங்கு வந்து சந்தான கிருஷ்ணர் பூஜை செய்கிறார்கள். தம்பதியருக்கு சந்தான கிருஷ்ணர் விக்ரகம் கையில் கொடுக்கப்பட்டு, கிருஷ்ணரே தங்களுக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். கிருஷ்ணருக்கு வெண்ணை மற்றும் தேனை நிவேதனம் செய்து அதனை தம்பதிகளுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
வைகானச ஆகமத்தின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜயந்தி, அனுமத் ஜயந்தி, நரசிம்ம ஜயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் உத்ஸவர் நரசிம்மப் பெருமாள் சன்னிதி ஊர்வலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. இக்கோயில் காலை 7.30 முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.