
கோகுலத்தில் கண்ணன் பலராமனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில், ‘பழம் பழம்’ என ஒரு பெண் கூவிச் செல்வது காதில் விழுந்தது. கண்ணனுக்கு பழம் வாங்க ஆசை. ஆனால், கையில் காசு இல்லை. பக்கத்து வீட்டில் திண்ணையில் குவித்து வைத்திருந்த தானியத்தை தனது இரு குட்டி கைகளிலும் அள்ளிக்கொண்டு ஓடினான். ஓடும்போது தானியம் தெருவில் சிந்தியது. இருந்தாலும், கையில் இருப்பதை பழம் விற்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, ‘இதற்கு பதிலாக பழம் கொடு’ என்று கேட்டான்.
கண்ணனின் வசீகர முகத்தைக் கண்ட அந்தப் பெண், தன்னையே மறந்து போனாள். ‘கிருஷ்ணா உனக்கு வேண்டியதை தாராளமாக எடுத்துக்கொள்’ என்று கூடையை கீழே இறக்கி வைத்தாள். கண்ணனும் இரு கைகளால் பழங்களை அள்ளிக்கொண்டு மார்போடு அணைத்துக் கொண்டு புறப்பட்டான். அப்போது கூடையைக் கண்ட அவளால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. கண்ணன் கொடுத்த தானிய மணிகள் அவ்வளவும் நவரத்தின மணிகளாக மாறிக் கிடந்தன. அன்புடன் கொடுத்த கொஞ்சம் பழத்திற்கு ஈடாக ஆயிரமாயிரம் மடங்கு லாபம் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள்.
மனதில் கண்ணனை நினைத்தாள். அவனும் காலில் சதங்கை குலுங்க புன்னகை புரிந்தபடி அவள் முன்பு நின்றான். சின்ன கண்ணனைக் கண்டதும் இரு கைகளைக் குவித்து அவள் வணங்கினாள். இந்த சம்பவம் மூலம், ‘பழமோ, பூவோ எதைக் கொடுத்தாலும் அதை அன்போடு கொடுத்தால் அருள் தருவேன்’ என்று கீதையில் கொடுத்த வாக்கினை கண்ணன் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறான். கிருஷ்ண ஜயந்தியன்று மிகுந்த பக்தியுடன் உங்கள் காணிக்கையை அவனுக்குக் கொடுங்கள். உங்கள் இல்லத்திற்குள் அவனது பாத கொலுசுகள் ஓசை எழுப்புவதை உணர்வீர்கள்.
காஷூ எனும் ஆதரவற்ற சிறுவன் ஒருவன் இருந்தான். மூன்று நாட்களாக பட்டினியால் வாடினான். பசி பொறுக்க முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தான். அப்போது அவர் முன்பு நாரதர் தோன்றி, ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்து, ‘நீ விரும்பும் போதெல்லாம் இதிலிருந்து அறுசுவை உணவு கிடைக்கும்’ என்றார். அவனும் தேவையானபோதெல்லாம் தான் விரும்பியதை சாப்பிட்டான்.
இந்த நிலையில், ஒரு நாள் காஷூவுக்கு பேராசை ஏற்பட்டது. ஆற்றில் மூழ்குவது போல நடித்து, நாரதர் மூலம் பெரும் பணக்காரனாக மாற நினைத்தான். ஆனால், நாரதர் அவனுக்குக் காட்சி தரவில்லை. அதோடு மட்டுமின்றி, அவன் வைத்திருந்த அட்சய பாத்திரத்தையும் காணவில்லை. இதனால் வருந்திய அவன் துன்பம் தீர கிருஷ்ணரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான்.
அவனது இந்த நிலையைக் கண்ட மகாலட்சுமி அவனுக்கு விரைந்து அருளும்படி கேட்க, அதற்கு பகவானும் சம்மதித்தார். காட்சி கொடுத்த கிருஷ்ணரை சரண் அடைந்தான். ‘சிறுவனே கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாக குருவாயூரில் பிறப்பாய். அப்போது எனக்கு தினமும் அபிஷேகம் முடிந்ததும் வாகை மரத்தூளை தேய்த்து என்னைத் தூய்மைப்படுத்துவர். அந்த வகையில் எனக்கு சேவை செய்யும் பேற்றை நீ பெறுவாய். இந்த வாகை சார்த்துப்படி மூலம் பக்தர்களின் சரும நோய்கள் தீரும்’ என ஆசியளித்து மறைந்தார். குருவாயூர் குருவாயூரப்பனுக்கு வாகை சாத்து வழக்கம் இன்றும் தொடர்கிறது.
பக்தர் அக்ரூரர், ஆயர்பாடியில் இருந்த கண்ணன் மற்றும் அவரது அண்ணன் பலராமரை மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மதுராவாசிகள் அவர்களின் அழகில் மெய்மறந்தனர். அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தனக் கிண்ணத்துடன் எதிர்ப்பட்டாள். ‘குணத்தால் உயர்ந்த பெண்ணே, சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்’ எனக் கேட்டார் கண்ணன்.
‘அசுரன் கம்சனுக்கு பணிவிடை செய்து எனது வாழ்நாளை வீணாக்கி விட்டேன். இன்று ஒரு நாளாவது சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து நன்மை பெற விரும்புகிறேன்’ என்றாள். அதைத் தொடர்ந்து கண்ணன், பலராமருக்கு சந்தனம் பூசினாள். கண்ணன் தனது விரல்களால் அவளின் முகவாய் மற்றும் கால்களை வேகமாக அழுத்தினார்.
கணப்பொழுதில் கூன் நிமிர்ந்த அவள், அழகியப் பெண்ணாக மாறினாள். கிருஷ்ணன், பலராமருக்கு சந்தனம் அளித்த புண்ணியத்தால் உடனடியாக பலன் ஏற்பட்டதை எண்ணி மகிழ்ந்தாள். இந்தப் பெண் யார் தெரியுமா? கைகேயிடம் பணி பெண்ணாக இருந்து ஸ்ரீராமரை காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரைதான் மறுபிறவியில் கண்ணனுக்கு சந்தனம் அளித்து தனது பாவம் நீங்கப் பெற்றாள். வளைந்த கூன் நிமிர்ந்தது போல, கண்ணனை நம்பினால் நடக்காது என நினைத்த அற்புதம் அனைத்தும் நடக்கும்.