
காயத்ரி மந்திரத்தினை உச்சரித்தால் காரிய வெற்றி கிடைக்கும். தினமும் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருபவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கைகூடி வரும் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத்தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. நம் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறவும், வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் கிடைக்கவும் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கலாம். தினசரி காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு ஐஸ்வர்யங்களும் மன நிம்மதியும் கிடைக்கும் என்பதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
‘வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்’ என்று பகவத்கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும், மாலையில் சூரிய அஸ்தமன வேளையிலும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இதனால் பாவங்கள் அழியும்.
காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துகள் எல்லா தேவர்களையும் குறிக்கிறது. அது மட்டுமின்றி, அவர்களின் அருளையும் பெற்றுத் தருகின்றது. சிறப்பு வாய்ந்த காயத்ரி மந்திரம் விசுவாமித்திர முனிவரால் சித்திக்கப்பெற்று அதனால் அவர், ‘பிரம்மரிஷி’ என்ற பட்டம் பெற்றது. கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இது ஒரு தைப்பொங்கல் திருநாள் அன்று நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரங்களில் சிறந்த காயத்ரிக்கு உருவம் தந்தவர் விசுவாமித்திர முனிவர். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட காயத்ரி தேவியை அவர் உருவாக்கினார். காயத்ரி தேவிக்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி புலன்களின் தலைவி, சாவித்ரி உயிரின் தலைவி, சரஸ்வதி வாக்கின் தலைவி. எண்ணம், செயல், சொல் மூன்றாலும் தூய்மையையும், மேன்மையையும் உணர்த்துபவரே (திரிகரணசுத்தி) காயத்ரி தேவி. மனிதர்கள் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் தூய்மையை கடைப்பிடித்து காயத்ரி தேவியை வழிபட்டு வந்தால், கர்மவினைகள் அகலும் என்பதே காயத்ரி வழிபாட்டின் பலன்.
சிதம்பரம் அருகேயுள்ள கஞ்சித்தொட்டி என்ற பேருந்து நிறுத்தம் அருகே வேதத்தின் பொருளாகத் திகழும் காயத்ரி தேவிக்கு கோயில் உள்ளது. இங்கு ஐந்து முகங்களுடன், கைகளில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, இசை, ஏடு ஆகிய ஆயுதங்களை ஏந்தியவாறு, வெண் தாமரையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். காயத்ரியின் ஐந்து முகங்கள் பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்ம வடிவானவள் என்பதைக் குறிக்கிறது.
காயத்ரி தேவிக்கு முதன்முதலாக கோயில் எழுப்பப்பட்ட பெருமையும், புகழும் சிதம்பரத்திற்கே சேரும். ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் காயத்ரி தேவிக்கு சிறிய ஆலயம் இருந்தது. இங்குள்ள காயத்ரி தேவியை, அந்தணர் ஒருவர் தினமும் வழிபட்டு வந்தார். ஒரு சமயம் கடுமையான தோஷத்தால் துன்பப்பட்ட மன்னன் ஒருவன், தில்லை காளியை தரிசித்து விட்டு, நடராஜரை தரிசனம் செய்ய வந்தான். அவனை சந்தித்த அந்தணர், காயத்ரி தேவியின் மந்திரத்தை மன்னனுக்கு சொல்லிக் கொடுத்தார். அதை உச்சரித்து வந்த மன்னன், குணம் பெற்றான். இதையடுத்து மன்னன், காயத்ரி தேவிக்கு மிகப்பெரிய ஆலயத்தை அமைத்தான்.
காலப்போக்கில் அழிந்துபோன இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 1990ல் கும்பாபிஷேகம் கண்டது. இந்த குடமுழுக்கின்போது, பல தலைமுறைகளாய் பூஜிக்கப்பட்டு வந்த 2 அடி உயர மூலவர் சிலையை மாற்றி, நான்கடி உயரத்தில் உட்கார்ந்த நிலையிலான காயத்ரி தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய மூலவரும் கருவறையிலேயே இருக்கிறார்.
இந்த ஆலயத்தின் சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வலது புறம் விநாயகரும், இடதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர். நடுநாயகமாக அன்னை காயத்ரி தேவி தாமரை மலரில் அமர்ந்து பேரருள் புரிகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி, சாவித்ரி ஆகிய ஐந்து கடவுளர்களின் வடிவமாக அன்னை திகழ்கிறாள். அவரது கரங்களில் கதை, அங்குசம், சங்கு, சக்கரம், தாமரை மலர், சாட்டை, கிண்ணம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். அன்னையின் பாதத்தின் அருகே
ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. தேவியின் முன்பு நந்தீஸ்வர பெருமானும், பலி பீடமும் இடம்பெற்றுள்ளன. கருவறைக் கோட்டத்தில் சரஸ்வதி, அமுதக்கலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்கை ஆகியோர் உள்ளனர்.
ஒவ்வொரு பௌர்ணமிதோறும் இந்த ஆலயத்தில் சிறப்பு ஹோமமும், திருவிளக்கு வழிபாடும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு மந்திரங்களை ஜபித்து வழிபாடுகளை மேற்கொண்டால் கல்வி கேள்விகளில் ஞானம் கைவரப்பெறும், வேலையின்மை, தொழில் முடக்கம் ஆகியவை நீங்கும். தோஷங்கள் மற்றும் வினைகள் அகலும், அனைத்து செல்வங்களும் பெற்று பரிபூரண வாழ்வும் கிட்டும் என்பது நம்பிக்கை.