
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவட்டாறு கோயில் 108 வைணவ தேசத்தில் 76வது ஆகும். இங்குள்ள பெருமாள் ஆதிகேசவன், தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கால்வாய் தீர்த்தம், காட்டாறு, ராம் தீர்த்தம். பள்ளிகொண்ட நிலையில் அருளும் ஆதிகேசவப்பெருமாள், ‘கேசன்’ எனும் அரக்கனையும் அவனது சகோதரி கேசியையும் வீழ்த்தினார். அதனால் ஆதிகேசவன் என்ற பெயர் வந்தது.
கேசன் கொடூர அரக்கன். பிரம்மாவிடம் இருந்து மரணமில்லா வரம் பெற்றவன். தனது பலத்தால் தேவர்களை துன்புறுத்தினான். கேசியோ, இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்கும்படி கேட்க, இந்திரன் மறுத்ததால் கோபமுற்று தனது சகோதரன் கேசனிடம், இந்திரன் அவளை பலாத்காரம் செய்ய முயன்றதாகப் பொய் கூற, கோபம் கொண்ட கேசன் இந்திரனை வீழ்த்தினான்.
அசுரன் கேசன், சூரிய, சந்திரனையும் அவமதித்தான். இதையறிந்த மகாவிஷ்ணு, கேசனுடன் போரிட்டார். ஆனால், அவனை வீழ்த்த முடியவில்லை. அப்போது பராசக்தி, "கேசன் மரணமற்றவன். அவனை வீழ்த்த முடியாது. ஆதிசேஷன் அவனைச் சுற்றி அணை கட்டட்டும். நீ அதன் மேல் சயனிப்பாய்" என்று கூறினாள்.
அதன்படி ஆதிசேஷன் மீது திருவட்டாறு பெருமாள் படுத்திருக்கிறார். இந்தப் பாம்பின் கீழ் கேசன் இருப்பதாக ஐதீகம். இதனால் கோபமடைந்த அவனது சகோதரி கேசி, கங்கையை நோக்கி வணங்க, கங்கை இரு கிளைகளாகப் பிளந்து ஆதிகேசவனை அழிக்க வந்தாள். இதைப் பார்த்த பூதேவி, பரமன் இருந்த தலத்தை உயரும்படி செய்தார். இதனால் இரு நதிகளாலும் இத்தலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த இரு நதிகளே கோதையாறு மற்றும் பரளியாறாக ஆகியது. திருவட்டாறில் இந்த ஆலயம் தரை மட்டத்திலிருந்தே 16 அடி உயரத்தில் உள்ளது.
நம்மாழ்வார் காலத்தில் திருவட்டாறு சிறிய ஆலயமாக இருந்திருக்கிறது. கோதை மற்றும் பரளியாறு இந்த ஊரைச் சுற்றி ஓடுவதால் இந்த ஊருக்கு திருவட்டாறு எனப் பெயர் வந்தது. 108 திவ்ய தேசங்களிலேயே இந்தப் பெருமாள்தான் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இவர் திருமேனி 22 அடி நீளம் உள்ளது. மூன்று வாசல்கள் வழியாகவே திருமுகம், திருக்கரம், திருப்பாதத்தை தரிசிக்க முடியும்.
இங்குள்ள பெருமாளின் திருமேனி 1,60,008 சாளக்ராம கற்களை இணைத்து உருவானது. பெருமாளுடன் கருவறையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளனர். இவர் நாபியில் பிரம்மா கிடையாது. இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது கைடபர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு காணப்படுகிறார். இக்கோயில் பூஜைகளை பிராமணர்கள் செய்வதில்லை. போத்தியர்கள்தான் செய்கின்றனர்.
இக்கோயிலில் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியக் கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். இந்தப் பெருமாள் திருவனந்தபுரம் பத்மனாபரை நோக்கிய நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு நோக்கி இருக்கும் பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு.
பெருமாள் இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலைவைத்து, வடக்கே திருவடி காண்பித்து சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலின் சிற்பக்கலை கேரள மாநிலத்தைப் போன்று மரத்தால் ஆன தூண்கள், கதவுகள் மற்றும் கூரைகள் கொண்டதாகும். இக்கோயில் பிரசாதங்கள் அப்பம் மற்றும் பால் பாயசம் மிகவும் சுவை நிறைந்ததாகும்.