
தெப்பத் திருவிழா என்பது தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தைச் சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வரும் விழாவாகும். ஆண்டுக்கு ஒரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழா கொண்டாடுவார்கள். திருத்தணி கோயிலில் ஆடி கிருத்திகைக்கு தெப்பத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். குமரன் சினம் தணிந்து தனது தேவியுடன் குன்றில் அமைந்த அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடுதான் திருத்தணி.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை ஐந்து நாட்கள் திருவிழாவாக நடைபெறும். ஆடி மாதம் அஸ்வினியுடன் துவங்கி, ஆடி பரணி, ஆடி கிருத்திகை என இந்த விழா கோலாகலமாகக் களைக்கட்டும். திருத்தணி கோயில் வெள்ளி வேல் விமானத்தில் முருகன் வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சரவணப் பொய்கையில் வள்ளி தெய்வானை சகிதமாக முருகப்பெருமானும் தெப்பத்தில் வலம் வரும் காட்சி பக்தர்களுக்குக் கண்கொள்ளாக் கட்சியாக இருக்கும். மூன்றாம் நாள் நடைபெறும் இந்தத் தெப்ப திருவிழாவில் உத்ஸவ பெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
முருகப்பெருமான் தேவர்களின் துயர் தீர்க்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நடத்திய சிறு போரும் முடிந்து சினம் தணிந்து அமர்ந்த தலமாதலால் திருத்தணிகை என பெயர் அமைந்தது. கந்த புராணத்தில் மலைகளில் சிறந்தது என இந்தத் திருத்தணி மலை குறிப்பிடப்படுகிறது. கயிலாய மலைக்கு ஈடான பெருமை பெற்றது என்றும் கூறப்படுகிறது.
தாரகாசுரனுடன் போர் புரிந்து தனது சக்கராயுதத்தை இழந்த திருமால் முருகனை எண்ணி துதித்து அதனைப் பெற்றார். ஆனால், திருமாலிடமிருந்து பறித்த சக்கராயுதத்தை முருகன் மீது தாரகன் ஏவி விட, அதனை தனது மார்பில் ஏற்றாராம் முருகப்பெருமான். பின்னர் அதனையே திருமாலுக்கு அளித்து விட இன்னமும் முருகனின் திருமார்பில் சக்கராயுதத்தால் ஏற்பட்ட வடு நன்கு தெரிகிறது. அதனால்தான் தணிகை முருகனின் மார்பில் ஒரு சிறு பள்ளம் உள்ளது. அதன் மீது அணிவிக்கப்படும் சந்தனமே அடியவர்களுக்கு அருள்கொடையாக வழங்கப்படுகிறது. இந்தத் திருமேனிப் பூச்சு, ‘ஸ்ரீ பாதரேனு’ எனப்படுகிறது. இந்த சந்தனத்தை உட்கொள்ளும் பக்தர்கள் பல துன்பங்களும் நீங்க பெறுகிறார்கள்.
திருத்தணிகை தலத்தில் மயிலுக்கு பதிலாக இந்திரனின் ஐராவதம் வாகனம் இருப்பது விசேஷம். தனது மகளை மணந்து கொண்டதற்காக இந்திரன் இதை முருகனுக்குப் பரிசாக அளித்தார். தனக்குப் பரிசாக வந்துவிட்டாலும் இந்திரனின் சம்பத்துக்கு குறைவு வந்து விடக்கூடாது என்பதற்காக அதனை இந்திரலோகத்தை பார்த்தவாறு கிழக்கு திசை நோக்கி நிற்குமாறு முருகன் செய்து விட்டார் என்பார்கள்.
மிகவும் சாந்தஸ்வரூபியாகக் காட்சி தரும் முருகன் இடது கையை தொடையில் வைத்தும், வலது கையில் வேலை தாங்கியும் எழில்மிகு கோலத்துடன் காட்சி தருகிறார்.
ஆடி கிருத்திகையன்று திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள குமார தீர்த்தம் என்னும் சரவணப் பொய்கை திருக்குளத்தில் நீராடி தூய்மை செய்து கொண்டு திருநீறு அணிந்து கொண்டு பக்தியுடன் மலை மீது ஏறுவார்கள். மலையேறும்போது திருப்புகழ் பாடல்களை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டே ஏறுவார்கள். பலர் காவடி எடுத்துக்கொண்டும் வருவார்கள். ஆடி கிருத்திகை விசேஷம் திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு பக்தர்களுக்கு பரவசத்தை அள்ளித்தரும் விழாவாக நடைபெறும்.
ஆடி கிருத்திகையன்று நடைபெறும் தெப்பத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதும்.