
‘ஆடி மாதம்’ என்று நாம் அழைப்பது, கேரள மாநிலத்தில் ‘கர்கடக மாதம்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது, ‘இராமாயண மாதம்’ என்றும் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரர்களாகிய ஸ்ரீராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகிய நால்வருக்கும் கேரளாவில் தனித்தனி கோயில்கள் உள்ளன.
‘அம்பலம்’ என்றால் கோயில். இந்த நால்வர்களின் கோயில்கள் ‘நாலம்பலம்’ என்ற பெயரால் வழங்கப்படுகின்றன. இந்த இராமாயண மாதத்தில் பக்தர்கள் இந்த நான்கு கோயில்களுக்கும், 'நாலம்பல யாத்திரை' என்று புனித யாத்திரை மேற்கொண்டு இராமாயண நால்வர்களையும் தரிசித்து அருள் பெறுகிறார்கள்.
இதில் ஸ்ரீராமர் கோயில் திருப்பிரையாரிலும், லட்சுமணன் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மூழிகுளத்திலும், பரதன் கோயில் இரிஞ்சாலக்குடாவிலும், சத்ருக்கனன் கோயில் பாயம்மல் என்னும் இடத்திலும் அமைந்துள்ளன. இதில் திருப்பிரையார் குருவாயூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், மூழிகுளம் திருச்சூரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், இரிஞ்சாலக்குடா திருச்சூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், பாயம்மல் என்ற இடம் இரிஞ்சாலக்குடாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் உள்ளன. இதில் மூழிக்குளத்தில் உள்ள சத்துருக்கனன் கோயில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும்.
பொதுவாக, இந்த நாலம்பலத்தை இந்த வரிசையிலேயே அதாவது, திருப்பிரையார், மூழிக்குளம், இரிஞ்சாலக்குடா, பாயம்மல் என்று தரிசிப்பவர்களும் உண்டு. ஒரே நாளிலேயே நாலம்பலங்களை புனித யாத்திரையாகச் சென்று தரிசிப்பவர்களும் உண்டு.
திருச்சூரில் தங்கினால் அங்கிருந்து நாலம்பங்களுக்குப் போவது சுலபம் என்பதால், அங்கே தங்கி நிதானமாக இரண்டு மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு நாலம்பங்களுக்குச் செல்பவர்களும் உண்டு.
நாலம்பலங்களிலும் அர்ச்சனை, அபிஷேகம் போன்ற சடங்குகள் தினசரி உண்டு. இக்கோயில்களில் நாம் முன்பதிவு செய்து கொண்டு சிறப்பு ஹோமங்களும் நடத்தலாம். கேரள புத்தாண்டு தினமான விஷு, இராமாயண மாதம், நவராத்திரி போன்ற சமயங்களில் இங்கே விழாக்கள் கோலாகலமாக நடைபெறும்.
நாலம்பல யாத்திரை இராமாயண மாதமாகிய கர்கடக மாதத்தில் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் இராமாயண நால்வர்களை தரிசிப்பது பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களையும், செல்வ வளத்தையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.