20 நாட்கள் 250 கிலோ மீட்டர் - Varkari 'பண்டரிபுரம் புனித நடைப்பயணம்'

Pandharpur Yatra
Pandharpur Yatra

மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட, ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களை வர்க்காரி (Varkari) என்கின்றனர். மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குத் தமிழில் புனித நடைப்பயணி என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் 'பண்டரிபுரம் பயணம்' எனும் 250 கிலோ மீட்டர் தொலைவிலான நடைபயணம் மேற்கொள்வதால், அவர்களுக்கு வர்க்காரி எனும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வர்க்காரிகள் கிருஷ்ணர் எனப்படும் விட்டலரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் (தியானேஸ்வர்), நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, புகையிலை ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

ஆண்டுதோறும் மகாராட்டிராவின் பல்வேறு பகுதியிலிருந்து, விட்டலரின் வர்க்காரி நெறியைப் போற்றும் 10 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், வைணவ சாதுக்களான ஞானேஸ்வர் மற்றும் துக்காராம் ஆகியோரின் சமாதிகள் உள்ள புனே நகரத்திற்கு அருகில் உள்ள ஆளந்தி மற்றும் தேகு பகுதிகளிலில் ஒன்று கூடுகின்றனர். விட்டலரின் பக்தர்களான இவர்கள் துளசி மணி மாலைகள் அணிந்து, சாதுக்களின் பாதுகைகளைத் தனித்தனி பல்லக்குகளில் வைத்து, பல்லக்கை மாட்டு வண்டிகளில் ஏற்றி வர்க்காரி மரபுப்படி, அங்கிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டரிபுரத்திற்கு 20 நாட்கள் நடைபயணமாகச் செல்கின்றனர். இதனை, 'பண்டரிபுரம் புனித நடைப்பயணம்' என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: இறைவனின் இருப்பிடம் எது தெரியுமா?
Pandharpur Yatra

இந்தப் பயணத்தின் போது, விட்டலரின் பெருமைகளையும், ஞானேஸ்வர், துக்காராம், நாமதேவர் போன்ற விட்டலரின் அருள் பெற்ற ஞானிகளின் பெருமைகளையும் தம்புரா மற்றும் ஜால்ரா கட்டைகளை இசைத்து கொண்டே ஆடியும், பாடியும் செல்கின்றனர். பகவான் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்தில் முடிவடையும் இந்தப் புனித நடைப்பயணம், ஆடி மாத ஏகாதசி அன்று பண்டரிபுரத்தில் நிறைவடைகிறது.

பயணத்தின் இறுதி நாளான ஆடி மாத ஏகாதசி அன்று பீமா ஆற்றில் குளித்து பக்தர்கள் பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்குச் சென்று விட்டலரை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. இதே போன்று, கார்த்திகை மாத ஏகாதசி நாளிற்கும் புனித நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com