
நாம் செய்த பாவங்களை உடைப்பதில் தானங்களுக்கு தனி இடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் அந்தப் பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால், அவரவர் சக்திக்கேற்ப தானங்களை செய்யலாம். உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு. அதை பிறருக்கு தானம் செய்தால் அதன் பலன்கள் அதிகம். தானத்தில் சிறந்தது அன்னதானம். ‘அன்னமிட்ட வீடு சின்னம் கெட்டுப் போகாது’ என்பர். அன்னதானம் செய்தால் பூர்வ ஜன்ம கர்ம வினைகள் தீர்வதோடு, பித்துருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
பிரதிபலனை எதிர்பார்க்காமல், உண்மையான மனதோடு அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்குப் பயன்படவில்லை என்பதற்காக நாம் பயன்படுத்தாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கிக் கொடுப்பதால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இதன் மூலம் உங்களுக்கு பாவம்தான் வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல்வேறு விதமான தானங்களை நாம் செய்யும்போது துளசி இலைகளையும் சேர்த்து தானம் செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும் என்கிறது சாஸ்திரம். துளசியை தானமாகக் கொடுத்தால் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும். இனி வரும் நாட்களில் நீங்கள் தானம் செய்யும்போது முழு மனதோடு, சந்தோஷத்தோடு துளசி இலைகளையும் சேர்த்து தானம் வழங்கி புண்ணியத்தை இரட்டிப்பாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
அன்னதானம் செய்பவரை வெயில் வருத்தாது, வறுமை தீண்டாது, இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடி கொண்டிருக்கும் என்கிறார் வள்ளலார்.
தானங்களும் அவற்றின் பலன்களும்:
1. மஞ்சள் தானம் - மங்கலம் உண்டாகும்.
2. பூமி தானம் – இக, பர சுகங்கள் கிடைக்கும்.
3. வஸ்த்ர தானம் - சகல ரோக நிவர்த்தியாகும்.
4. கோ தானம் - பித்ரு சாப நிவர்த்தி, இல்லத்தில் தோஷங்கள் விலகும் ,பலவித பூஜைகள் செய்த பலன்கள் கிடைக்கும்.
5. தில (எள்) தானம் - பாப விமோசனம் உண்டாகும்.
6. குல (வெல்லம்) தானம்- குல அபிவிருத்தி ஏற்படும்.
7. நெய் தானம் –வீடு, பேறு அடையலாம்.
8. தேன் தானம் - சுகம் தரும். இனிய குரல் கிடைக்கும்.
9. வெள்ளி தானம் - பித்ருக்கள் ஆசி கிடைக்கும்.
10. சொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.
12. கம்பளி தானம் – துர்சொப்பன, துர்சகுன பய நிவர்த்தி உண்டாகும்.
13. பால் தானம் – சகல சௌபாக்கியம் ஏற்படும்.
14. சந்தனக்கட்டை தானம் – புகழ் உண்டாகும்.
15. அன்னதானம் - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
தானம் கொடுக்கக்கூடாத 3 பொருட்கள்: கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாரை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாகக் கொடுத்தீர்களானால் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டைத் தேடி வரும். பழைய உணவுகளை தானமாகக் கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும். மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக் கூடாது. தவறி செய்தால் வீட்டில் பணப் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாகக் கொடுத்து சிரமங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள்.