இந்த பரபரப்பான காலகட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவமனைகளைத் தேடியும், கோயில் குளங்களைத் தேடியும் செல்வதை அதிகம் காண முடிகிறது. மன அழுத்த நிவாரணம் தந்து அமைதியான வாழ்க்கையை அருளும் மகிமை மிகுந்த கோயில் பல உள்ளன. அவற்றில் பிரத்யேகமாக மன அழுத்தத்தைப் போக்கும் 3 பரிகாரத் தலங்கள் குறித்தும், அத்தலத்துக்குச் சென்று எவ்வாறு வழிபாடு மேற்கொள்வது என்பது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
சோளிங்கர்: வேலூர் மாவட்டம், அரக்கோணத்திற்கு அருகே உள்ள சோளிங்கர் ஒரு விசேஷமான பிரார்த்தனை தலமாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பேய், பிசாசு, சூனியம், பைத்தியம் என்று சொல்லப்படும் அனேக வியாதிகள் தீர வணங்கப்பட வேண்டிய தெய்வம் இத்தல ஆஞ்சனேயர். மேற்குறிப்பிட்ட உடல், மன பிரச்னைகள் தீர இங்கு வந்து விரதம் கடைப்பிடித்து பிரதி தினமும் தக்காண்குளத்தில் நீராடி, மலை மீது ஏறி பெருமாளை வலம் வந்து தங்கள் நோய்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.
இங்கே ஒரு சிறிய மலையில் யோக ஆஞ்சனேயர் வீற்றிருக்கின்றார். சோளிங்கரில் உள்ள பெரிய மலையில் யோக நரசிம்மர் வீற்றிருக்கின்றார். இவ்வூரில் ஒரு கடிகை நேரம் (24 நிமிடம்) தங்கி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பதால் இதற்கு கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டன. விசுவாமித்திரர் இங்கே நரசிம்மரை ஒரு கடிகை நேரம் துதி செய்து பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றதாக ஐதீகம்.
நரசிம்மர் அவதாரத்தை தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க ஒரு கடிகை என்று சொல்லக்கூடிய 24 நிமிடத்திற்குள் பயன் பெற்றமையால் கடிகாசலம் என்ற பெயர் பெற்றது இத்தலம். இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோட்சம் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது.
குணசீலம்: திருச்சி - முசிறி - நாமக்கல் பேருந்து மார்க்கத்தில் உள்ள இந்த புண்ணியத் தலத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. திருச்சி அருகே குணசீலம் என்ற இடத்தில் இந்தப் புண்ணிய தலம் அமைந்துள்ளது. ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாசனை நின்ற திருக்கோலத்தில் இங்கே தரிசிக்கலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சித்த பிரமை பிடித்தவர்கள், மனநோய் வந்தவர்கள், பில்லி, சூனிய பாதிப்பு உடையவர்கள் இங்கே ஒரு மண்டலம் என்று சொல்லக்கூடிய 48 நாட்கள் தங்கி பெருமாளை வழிபட்டால் குணம் கிடைக்கப் பெறலாம் என்பது பிரசித்தம். திருப்பதி செல்ல முடியாதவர்கள் அவர்களது பிரார்த்தனையை இவ்விடத்தில் செலுத்தலாம் என்பது சிறப்பு.
சோட்டாணிக்கரை: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் குடிகொண்டிருப்பவள் சோட்டாணிக்கரை பகவதி அம்மன். சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் தீய சக்திகளான மன நோயையும், பில்லி, சூனியத்தையும் கட்டுப்படுத்தி ஒழிக்கும் சக்தி கொண்ட காரணத்தால் இங்கே சென்று வந்தாலும் சகல நோய்களும் மனக்குறைகளும் நீங்கி சந்தோஷமாக வாழலாம் என்பது கண்கூடு.
மேலும், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே நின்று புலம்புவதையும், பிரார்த்தனை செய்வதையும் இந்த பகவதி அம்மன் கோயிலில் காணலாம். மேலும், மன நோயால் பாதிக்கப்பட்டு திருமணம் செய்ய முற்படுபவர்கள், மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் மூதாதையர் யாராவது மனநோயால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், இளைய தலைமுறையினர் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வதை பெரும் பிரார்த்தனை மற்றும் பரிகாரமாக ஏற்று செய்து கொள்கிறார்கள். இதனால் தோஷம் கழியும் என்பது அவர்களின் நம்பிக்கை.