தை மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மிகவும் விசேஷமாகும். தை மாத வெள்ளிக்கிழமையில் அபிராமி அந்தாதி, சௌந்தர்யலஹரி போன்ற அம்பிகை குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளவேண்டும்.
பொதுவாக, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும். இந்த நாளில் அம்பாள் குடி கொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.
தை மாத வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். செல்வத்தை அள்ளித் தரும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை நாளில் உத்தராயண காலமாகிய தை மாதத்தில் தவறாமல் விரதம் இருந்து கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளிக்கிழமையிலும் அம்பிகையை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும் தை மாத வெள்ளிக்கிழமைக்கு தனிப் பெருமை உண்டு.
தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும் வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம். வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் எதிர்ப்புகள் விலகும், இன்னல்கள் தீரும், போராட்ட நிலை மாறி, வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் குடும்பத்தின் செல்வநிலை உயரும், செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
தை மாத ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலம் போட்டு மாவிலை தோரணம் கட்டி, மகாலட்சுமி தாயாருக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் தாமரை கோலம் போட்டு, ‘திருமகளே வருக, செல்வம் வளம் தருக’ என்று கோலமாவினால் கூட எழுதலாம். வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும். சிறிய வாழை இலையின் மீது கல் உப்பைப் பரப்பி அதன் மீது அகல் வைத்து நெய் தீபம் ஏற்றலாம்.
மகாலட்சுமி தாயாரின் கடைக்கண் பார்க்க தை மாத வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது. மகாலட்சுமிக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் நெய்வேத்தியம் செய்து மனதார வழிபட்டால் சுக்கிர யோகம் கிடைக்கப்பெறும். மாலையில் வீட்டில் பூஜை செய்து விட்டு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல நேரம், ராகு காலம் என்று இருப்பது போல் ஹோரைகளும் உள்ளன. வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால் இந்த நாளில் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் சேரும்.
வெள்ளிக்கிழமைகளில் மூன்று முறை சுக்கிர ஹோரை வரும். காலை ஆறு முதல் ஏழு, பகல் ஒன்று முதல் இரண்டு, இரவு எட்டு முதல் ஒன்பது மணி ஆகிய காலங்கள் சுக்கிர ஹோரை நேரங்கள் ஆகும். இந்த நேரத்தில் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒருவருக்கு பொன், பொருள், ஆடை, ஆபரணங்களைத் தருவதும் மகாலட்சுமியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவள் அன்னை மகாலட்சுமி தாயார்தான்.
அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி ஆகிய அனைத்தையும் தருபவள் மகாலட்சுமி தாயார்தான். ‘லக்ஷ்மி’ என்ற சொல்லுக்கு, ‘நிகர் இல்லாத அழகி’ என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களில் எல்லாம் திருமகள் அருள் இருக்கும். எனவேதான், மகாலட்சுமிக்கு தனது இதயத்தில் இடம் அளித்து, ‘ஸ்ரீனிவாசன்’ எனப் பெயர் பெற்றார் மகாவிஷ்ணு.
நாளை தை முதல் வெள்ளிக்கிழமை. இத்தினத்தில் அம்பாளை, மகாலட்சுமி தாயாரை கோயிலிலும் வீட்டிலும் வழிபட்டு அவளின் கடைக்கண் பார்வையினால் கோடி செல்வம் பெறலாம்.