ராமாயணம், மகாபாரதத்தில் அதிகம் அறியப்படாத 4 புராணப் பெண்கள்!

4 lesser-known mythical women
4 lesser-known mythical women
Published on

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் ராமர், அவருடைய சகோதரர்கள், ராவணன், கிருஷ்ணர், பாண்டவர்கள், கௌரவர்கள் என்று ஆண் கதாபாத்திரங்களும், சீதை, கைகேயி, திரௌபதி, குந்தி போன்ற பெண் கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். ஆனால், சக்தி வாய்ந்த, அதிகம் அறியப்படாத புராணப் பெண்கள் நால்வரைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மண்டோதரி: இலங்கை மன்னன் ராவணனின் மனைவி மண்டோதரி. அழகும் பேரறிவும் பொறுமையும் நிதானமும் வாய்ந்த பெண். இலங்கையின் மகாராணியாக இருந்தபோதும் ஆடம்பரமான வாழ்க்கை தயாராக இருந்தபோதும் அவள் மிகவும் எளிமையாக வாழ்ந்தாள். மாயையால் சூழப்படவில்லை. ஸ்ரீராமரின் மனைவி சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் ராவணன் சிறை வைத்தபோது, சீதையை ராமரிடம் திருப்பி அனுப்புமாறும் போரை தவிர்க்கும்படியும் கணவனிடம் வலியுறுத்தினாள் மண்டோதரி.

கணவனின் ஆணவமும் பிறர்மனை கவர நினைக்கும் பேராசையும், அவனையும் இலங்கையையும் அழித்துவிடும் என்று நன்கு உணர்ந்த மண்டோதரி, அதற்காக தனது கணவனிடம் வாதாடினாள். அவளுடைய ஞானம், தார்மீக குணம், கணவனை சரிசெய்ய முயன்ற துணிச்சல் போன்றவை மண்டோதரிக்கு தனி இடத்தை ராமாயணத்தில் பெற்றுத் தந்திருக்கிறது. கணவனே ஆனாலும் அவன் செய்யும் தவறுகளைத் திருத்தத் துணிந்த மிக வலிமையான பெண்மணியாகக் கருதப்படுகிறாள்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சுய வலிமையை பறைசாற்றும் உற்சாகக் காலமே ஆடி மாதம்!
4 lesser-known mythical women

2. இடும்பி: பாண்டவர்களில் ஒருவரான பீமனுடைய மனைவி இடும்பி. காட்டில் வசித்த அசுர குலத்தைச் சேர்ந்த பெண் என்றாலும், கணவன் பீமன் மேல் மாறாத அன்பு வைத்திருந்தாள். அவளுடைய சகோதரன் இடும்பன் என்கிற அரக்கனை பீமன் கொல்ல முயன்றபோது பீமனை எதிர்த்து தைரியமாகப் போரிட்டாள். அதன் பின் காதல் வயப்பட்டு தன்னுடைய குடும்ப மரபுகளுக்கு எதிராக பீமனை மணக்கத் துணிந்தாள். அரக்கர் குலத்தைச் சேர்ந்த பெண் என்றாலும் மிகவும் வலிமையானவள், சுதந்திரமானவள்.

தனது வம்சாவளிக்கு எதிராகச் செயல்பட்டாலும் கூட மனதுக்கு பிடித்த மணாளனைத் தேர்வு செய்யும் சக்தி வாய்ந்த மனமுடையவள். மிகவும் வலிமையான கடோத்கஜனை பெற்றெடுத்தாள். மகாபாரதப் போருக்கும் அனுப்பி வைத்தாள். கடோத்கஜனை தெரிந்த அளவுக்கு இடும்பியைப் பற்றி அதிகமாகப் பலருக்கும் தெரியாது.

இதையும் படியுங்கள்:
அதிசய குணங்கள் கொண்ட ஆடி மாதப் பிறவிகள்! நீங்களும் ஒருவரா?
4 lesser-known mythical women

3. உத்திரை: அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்திரை. கௌரவர்களின் சதியால் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கிக் கொல்லப்பட்டபோது இளம் பெண்ணான உத்திரை அதை மிகுந்த மன வலிமையுடன் தாங்கிக் கொண்டாள். குருக்ஷேத்திரப் போரால் சிதைக்கப்பட்ட தனது பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசான பரீட்சித்தை கர்ப்பத்தில் தாங்கியிருந்தாள்.

தளராத விடாமுயற்சி, மனவலிமை மற்றும் சக்தியால் பரீட்சித்துவை சிறந்த மன்னனாக மாற்றினாள். அவள் குதிரை ஏறி போர் புரியவில்லை சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆளவில்லை என்றாலும், அர்ப்பணிப்புணர்வுடன் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் மகனை மன்னனாக உருவாக்கி, தனது ராஜ்ஜியத்தை அவன் கையில் ஒப்படைத்தாள்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதத்துக்கும் இதுபோன்ற பேச்சு வழக்குக்கும் என்ன சம்பந்தம்?
4 lesser-known mythical women

4. ஊர்மிளா: ராமாயணக் கதாநாயகி சீதையை தெரிந்த அளவிற்கு அவளுடைய தங்கை ஊர்மிளாவை பலருக்கும் தெரியாது. சீதை, ஸ்ரீராமனை மணந்தது போல ஊர்மிளா, ஸ்ரீராமனின் தம்பி லக்ஷ்மணனை மணந்தாள். தனது அண்ணன் அண்ணியுடன் லக்ஷ்மணன் வனவாசம் சென்றான். 14 ஆண்டுகளும் அண்ணனையும் அண்ணியையும் பாதுகாப்பதற்காக இரவு முழுவதும் தூங்க மாட்டேன் என்று லக்ஷ்மணன் சபதம் எடுத்தான்.

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியம். ஆதலால் லக்ஷ்மணனுக்கு பதிலாக யாராவது அவனுடைய தூக்கத்தையும் சேர்த்து தூங்க வேண்டும் என்று நித்ரா தேவி பணித்தாள். அந்தப் பணியை ஊர்மிளா இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டாள். தனது கணவனுக்கும் சேர்த்து 14 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழித்தாள். தன்னுடைய கணவன் கடமையை அர்ப்பணிப்புணர்வுடன் செய்வதற்கு மன உறுதியும் வலிமையும் தன்னலமற்ற மனதுடன் ஊர்மிளா உறுதுணையாக இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com