கோயில் பழமை வாய்ந்ததாக இருக்கும்போது, அவ்வாலயத்தில் நடத்தப்படும் திருவிழாக்களும் தேரோட்டமும் தெப்போற்சமும் பழமை வாய்ந்ததாகதானே இருக்க முடியும். அதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல பெரிய ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களையும் தேரோட்டத்தையும் தெப்போற்சவத்தையும் குறிப்பிடலாம். அத்தகைய ஆலயங்களில் ஒன்று திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.
இவ்வாலயம் மட்டும் பழமை வாய்ந்தது அல்ல இவ்வாலயத்தில் ஓடும் தேரும் பழமை வாய்ந்தது. சுமார் ஐநூறாண்டு காலம் பழமையும் பெருமையும் கொண்டது. 476 ஆண்டு காலம் அர்த்தநாரீஸ்வரரை சுமக்கும் பாக்கியத்தை பெற்றது.
இந்த பெரிய தேர் இவ்வாண்டு தேரோட்டத்துடன் நிலைக்கு வந்து சேர்ந்தது. அடுத்த ஆண்டு அம்மையப்பர் பவனி வர புதிய தேர் பயன்பாட்டிற்கு வருகிறது.
நமது அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளு தாத்தா மற்றும் அவர்களுக்கு முன்னோர்கள் வடம் பிடித்து இழுத்த மிகப் பழமையான தேர். உலகத்தின் பெரிய தேர் வரிசையில் நான்காவதாக போற்றப்படும் தேர். இவ்வாண்டு நிறைவாக இறைவனை சுமந்து முடித்து அந்த நினைவுகளுடன் நிலைக்கு வந்து சேர்ந்ததை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
இந்த மிகப்பெரிய தேர் திருச்செங்கோடு வாழ் மக்கள் மனதில் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் இந்து மக்கள் மனதில் என்றென்றும் மதிப்புற்று நிறைந்திருக்கும் .
அர்த்தநாரீஸ்வரருக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தேர் இனி இருக்கும் காலம் பூராவும் பார்ப்பவர்களின் மனதில் தன்னை நினைவுபடுத்திக் கொண்டு தெய்வாம்சமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்.
நிலை சேர்ந்த அம்மையப்பன் தேரின் சக்கரங்கள் திருச்செங்கோட்டில் தேரோடும் வீதிகளில் பல தடங்களைப் பதித்திருக்கிறது. அதுவும் ஓராண்டு இரண்டாண்டுகள் அல்ல 476 ஆண்டுகள். அதாவது 476 திருச்சுற்றுகள்.
நம்மை, நமது நகரை நமது நாட்டை பெருமைப்படுத்திய இந்த தேரை என்றும் மறக்க முடியாது. நன்றியுடன் விடை கொடுப்போம்.
இந்த தேரை உடைத்து விடாமல் ஒரு நினைவுச் சின்னமாக ஆலயம் சார்பில் பாதுகாக்க முன் வந்தால் நம் தமிழரின் தொன்கலை இன்னும் பல ஆண்டுகளுக்கு வெளிநாட்டவர்களும் நமது அடுத்த சந்ததியினர்களும் காணும் அளவிற்கு நிலைத்து நிற்கும்.