இந்து மதத்தின் 8 சிரஞ்சீவிகள்: இவர்களை வழிபடுவது ஏன் அவசியம் தெரியுமா?

Ashta Chiranjeevigal Vazhipadu
Ashta Chiranjeevigal
Published on

ந்து மதத்தில் சிரஞ்சீவிகள் என்பவர்கள் என்றென்றும் இந்த பூமியில் நிரந்தரமாய் வாழ்பவர்கள் என்று நம்பப்படுகிறது. அதுபோன்ற சிரஞ்சீவிகளாக எட்டு பேர்கள் கருதப்படுகின்றனர். அனுமன், வியாசர், விபீஷணன், மகாபலி, பரசுராமர், மார்கண்டேயன், கிருபாசாரியார், அஸ்வத்தாமன் ஆகியோரே அந்த அஷ்ட சிரஞ்சீவிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களை வழிபடுவது நீண்ட ஆயுள் மற்றும் குடும்ப ஆரோக்கியம் போன்றவற்றைத் தரவல்லதாகக் கருதப்படுகிறது. இனி, அஷ்ட சிரஞ்சீவிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

அனுமன்: எந்த எதிர்பார்ப்புகளுமின்றி ஸ்ரீராமருக்கு தொண்டு செய்வது மட்டுமே தனது பிறவி என வாழ்ந்தவர். ஸ்ரீராமரால் சிரஞ்சீவி பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. இன்றளவும் சிரஞ்சீவியாக அவர் வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பதாக அருள்வாக்கு தந்திருக்கிறார்.

வியாசர்: வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதியவர் விநாயகர். மகாபாரதம் படிப்போரின் பாவங்களைப் போக்கும். மகாபாரதம் படைத்த வியாசர் சிரஞ்சீவியாக என்றென்றும் பூமியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

விபீஷணன்: இலங்கையை ஆண்ட ராவணனின் தம்பி விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல் நியாயத்தின் பக்கம் நின்றதால் விபீஷணன் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருப்பது நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?
Ashta Chiranjeevigal Vazhipadu

மகாபலி: இவர் அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நீதியும் நேர்மையுமாக ஆட்சி செய்தவர் மகாபலி சக்கரவர்த்தி. இதனால் தேவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் பாதாள லோகத்திற்கு அவரை அனுப்பினார் மகாவிஷ்ணு. அங்கே அவர் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டு மக்களை சந்திக்க வருகிறார். அதுவே ஓணம் பண்டிகையாகும்.

பரசுராமர்: பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் குரு இவர். ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தையின் ஆணைப்படி தனது தாயையே கொன்றார். மீண்டும் தனது தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார்.  ராமாயணம், மகாபாரதம் இரண்டும் இவரை சிரஞ்சீவி எனப் போற்றுகின்றன.

மார்கண்டேயன்: மிருகண்டு முனிவர், பருத்தி தம்பதியின் குழந்தையாக சிவனின் அருளால் பிறந்தவர் இவர். இவருக்கு 16 வயதுதான் ஆயுள் என்று பெற்றோர்களுக்குத் தெரியும். அதன்படி அவனது விதியை முடிக்க எமன் வந்தபோது, அவன் வீசிய பாசக்கயிறு சிவன் மீது விழுந்தது. இதனால் கோபமுற்ற சிவன், எமனை எட்டி உதைத்தார். மார்கண்டேயனும் என்றும் 16 வயதோடு வாழும் வரத்தை ஈசனிடம் பெற்றார் மார்கண்டேயன்.

இதையும் படியுங்கள்:
துளசி இலைகளைப் பறிக்கும் முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
Ashta Chiranjeevigal Vazhipadu

கிருபாசாரியார்: பாண்டு வம்சத்து குலகுருவாக இருந்தவர் இவர். கல்வி மற்றும் போர்த்திறனை பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்குக் கற்பித்தார். மகாபாரதப் போரில் கௌரவ சேனையிலிருந்து போரிட்டாலும் நடுநிலைமை தவறாதவர். போரின் முடிவில் பரீட்சித்து மன்னரின் அரச குருவாகப் பணியாற்றியவர்.

அஸ்வத்தாமன்: துரோணரின் மகனான இவர், மகாபாரதப் போரில் உயிர் பிழைத்த சிலரில் ஒருவர். இவரது தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டதால் பாண்டவர்களின் வம்சத்தை அழிக்க பாண்டவர்களின் புதல்வர்களைக் கொலை செய்தார். மேலும், பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரையின் கருவை கொல்ல முயற்சி செய்தார். ஆறாத காயங்களோடு, ரத்தம் சொட்டச் சொட்ட மரணமின்றி உலகை சுற்றி வரக்கூடிய தண்டனையை  சாபமாக அவருக்குக் கிருஷ்ணர் வழங்கினார். அதனால் அவரும் இந்த பூமியில் சிரஞ்சீவியானார்.

இந்த அஷ்ட சிரஞ்சீவிகளின் சிற்பம்  காட்மண்டுவில் நக்சல் பகவதி கோயிலில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com