
கோயிலுக்குச் செல்பவர்கள் தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்கு இவை அடங்கிய அர்ச்சனை தட்டு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். தேங்காய் உடைக்கும்போது அதில் பூ இருந்தாலோ அல்லது அழுகியிருந்தாலோ நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா என்பது குறித்து சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ள தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
நாம் சாமி கும்பிட வாங்கும் அர்ச்சனை தட்டில் உள்ள கற்பூரம், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் முதலியவற்றை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரிந்து வாங்குவோம். ஆனால், தேங்காயை உடைத்தால்தான் அது முற்றிய தேங்காயா? இளம் தேங்காயா? கொப்பரை காயா? அழுகியிருக்கிறதா? என்பதைக் கண்டறிய முடியும்.
இறைவனுக்கு உடைக்கும் தேங்காயில் பூ இருப்பது சாஸ்திரப்படி நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. மனதில் நினைத்த காரியங்கள் நிச்சயமாக முடியும் என்பதோடு, எதிர்பாராத வகையில் பண வரவு, மகிழ்ச்சியான செய்தி, நல்ல நிகழ்வுகள் நடக்க இருப்பதையும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க இருப்பதையும் தேங்காய்ப்பூ நமக்கு உணர்த்துகிறது.
பகவானுக்கு உடைக்கும் தேங்காய் முழு கொப்பரையாக இருந்தால் குழந்தை பேறுக்காகக் காத்திருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைப்பதோடு, வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. சண்டை சச்சரவுகள் நீங்கி பிரிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேர்வதோடு மகிழ்ச்சி நிலவும் என்றும் சாஸ்திரப்படி கூறப்பட்டுள்ளது.
கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமாக பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் ஆன்மிக விளக்கங்களின்படி தேங்காய் அழுகி இருப்பது உங்கள் குடும்பத்தை பிடித்திருந்த துர்சக்திகள், பீடைகள், கண் திருஷ்டிகள் நீங்கி விட்டதைக் குறிக்கும் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. நாம் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பதுதான் இதற்கான பொருள்.
தூக்கத்தில் அடிக்கடி கெட்ட கனவுகள் வருவது உடல்நிலை சரியில்லாமல்போவது போன்ற பிரச்னைகள் தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் தீர்ந்துவிடும். ஆகவே, கோயிலில் இறைவனுக்கு தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் பதற்றப்படவோ, மனம் சஞ்சலப்படவோ தேவையில்லை. இது நல்ல சகுனத்திற்கான அறிகுறி என்பதுதான் ஆன்மிக அறிஞர்களின் கூற்றாக உள்ளது.
தேங்காயில் உள்ள மூன்று கண்கள் மனிதனின் மும்மலங்களாகிய மாயை, ஆணவம், கன்மம் ஆகியவற்றை குறிப்பதால் இதை இறைவனுக்கு முன்பாக உடைக்கும் பொழுது என்னுடைய மும்மலங்களையும் உன் முன் உடைகிறேன் என்பதுதான் தேங்காய் உடைப்பதற்கு பின்னால் இருக்கும் தார்ப்பரியம் ஆகும்.
ஒரு பக்தன் தனது அகந்தையை இறைவனுக்கு முன்பாக சமர்ப்பிக்கிறான் என்பதுதான் தேங்காய் உடைப்பதன் தத்துவம் ஆகும். ஆகவே, தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அபசகுனம் என்று கருதாமல் அதற்கு மாற்றாக இன்னொரு நல்ல தேங்காயை வாங்கி மனதில் நினைத்து மீண்டும் உடைத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம்.