நம்முடைய வீட்டின் பூஜையறையை அழகாகவும், சுத்தமாகவும் பராமரிப்பதன் மூலமாக லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். தெய்வங்களின் பரிபூரண அருளும் நமக்குக் கிடைக்கும். நமக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் சரி, நல்லது நடந்தாலும் சரி நாம் முதலில் செல்வது பூஜையறையாகத்தான் இருக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகளை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. பூஜையறை எப்போதும் பளிச்சென்று வெளிச்சம் சூழ்ந்ததாக இருக்க வேண்டும். பூஜையறைக்கு என்று தனி அறையோ அல்லது ஸ்டான்டில் வைத்திருந்தாலோ இருள் சூழ்ந்து பூஜையறை இருக்கக் கூடாது.
2. கையில் விளக்குகளை ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் எச்சில் பாத்திரத்தில் சுவாமிக்கு நெய்வைத்தியம் வைக்கப் பயன்படுத்தக் கூடாது. அதற்கென்று தனியாகப் பாத்திரத்தை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
3. சுவாமிக்கு அர்ச்சனை செய்யும்போது முழு மலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.
4. வீட்டில் சுவாமி படத்துக்குப் போடப்பட்டு இருக்கும் பூவை காயும் வரை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதைப்போல பூ காய்வதற்கு முன்பாகவே எடுக்கவும் கூடாது. மலர் காயும் வரை விட்டு வைப்பதும், காய்வதற்கு முன்பு எடுத்து விடுவதும் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
5. சுவாமிக்கு படைக்கும்போது வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது. கட்டாயம் வெற்றிலையுடன், பாக்கு மற்றும் பூ இடம் பெற்றிருக்க வேண்டும்.
6. பூஜையறையில் விளக்கு ஏற்றிய பிறகு விளக்கில் ஒளி குறைவாக இருந்தால் திரியை தூண்டி விடலாம் அதில் தவறில்லை. ஆனால், விளக்கு திரியை தட்டிவிடக் கூடாது. ஏனெனில், விளக்கேற்றும்போது லக்ஷ்மி தேவி அதில் வந்து விடுகிறார். ஆகவே, திரியை தட்டிவிடும்போது அது அபசகுணமாக கருதப்படுகிறது.
7. பூஜையறையில் நின்றுக்கொண்டு எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். பூஜையறையில் இருந்து மங்கலகரமான வார்த்தைகளை பயன்படுத்தும்போது நல்ல விஷயங்கள் நடக்கும். இதுவே, கெட்ட விஷயங்களைச் சொல்லும்போது அதுக்கு ஏற்றவாறே எல்லாம் நிகழும்.
8. பூஜையறையில் விளக்கேற்றும்போது கட்டாயம் இரண்டு விளக்குகளை ஏற்றுங்கள். இரண்டுமே கஜலக்ஷ்மி விளக்கு அல்லது காமாட்சி விளக்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு விளக்குகளை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெய் ஆகியவற்றை பயன்படுத்துவது வீட்டில் நேர்மறையாற்றலை பரவச் செய்யும். இனி, பூஜையறைக்கு செல்லும்போது கட்டாயம் இந்த குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.