
ஹிமாச்சல் பிரதேசம், காங்ரா மாவட்டத்தில் உள்ள ஜுவாலாமுகியில் உள்ளது ஸ்ரீ ஜுவாலாமுகி திருக்கோயில். சதி தேவியின் நாக்குப் பகுதி விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. ஒரு சிறிய மலைத் தொடரில் அமைந்துள்ள இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இங்கு தீ ஜுவாலையே சக்தியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலை நிர்மானித்தவர் ராஜா பூமி சந்த் ஆவார்.
இக்கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் அடையாளமாக கோபுரம் திகழ்கிறது. இதை தரிசித்தாலே எல்லா சன்னிதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இங்கு பழைமையான பாறையின் இடுக்குகளில் இருந்து வரும் தீச்சுடர் எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிகிறது. இந்த தீச்சுடரே சக்தி தேவியாகும். அன்னை பராசக்தி பல்வேறு வடிவங்களில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.
ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துபவள், இங்கு தீச்சுடராக வெளிப்படுத்துவதால் ஜுவாலாமுகி என்று அழைக்கப்படுகிறாள். இந்த ஜுவாலையே லட்சுமி, சரஸ்வதி, காளி, அன்னபூரணி அம்சமாகத் திகழ்கின்றாள். காங்ரா பகுதியை ஆண்ட பூமிசந்த் மன்னன் கனவில் அம்பிகை தோன்றியதால் இக்கோயிலைக் கட்டினான்.
இக்கோயிலுக்கு மிகப்பெரிய வெண்கல மணியை வழங்கினான். கி.பி.1009ல் இஸ்லாமிய மன்னன் கஜினி முகமதுவால் இந்த ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். அதன் பின் ஆட்சிபுரிந்த அக்பர் இக்கோயில் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு எரிந்து கொண்டிருந்த ஜுவாலையை அணைக்க முயன்றான். அவனால் முடியவில்ல. பிறகு தேவியின் ஆற்றலை அறிந்து தங்கக் குடை ஒன்றை காணிக்கையாகச் தந்தான்.
அதற்கு அன்னை உடன்படவில்லை. அக்பர் அளித்த தங்கக் குடை சாதாரணமான உலோகமாக ஆகிவிட்டது. இப்படிப் பல வரலாற்று நினைவுகளோடு சம்பந்தப்பட்டதாக இக்கோயில் திகழ்கிறது. 1813ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இங்கு வருகை தந்து ஆலயத்தை சீரமைத்து கோபுரத்துக்கு தங்கக் கவசம் அளித்தானாம். மேலும், வெள்ளியாலான கதவையும் அமைத்தானாம்.
பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும் மனதில் வேதனை குறையவும் மக்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பாலும் நீரும் சமர்ப்பித்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.. இக்கோயில் சுமார் 2000ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கு ஐந்து முறை ஆரத்தி எடுக்கப்படுகிறது.