
தனது மகன் பரதன் உள்பட, அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளது தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
ராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராட்சசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனியின் அழைப்பை ஏற்று, அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அவரது குடிலில் தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னி பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூறும்படி ஸ்ரீராமரால் அனுப்பப்பட்டார் அனுமன். அவரும் நந்தி கிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்த பிறகு பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்” என்றார்.
பரதனும், “ஸ்ரீராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ” எனக் காட்டினான். அவளை வணங்கிய பின் மீண்டும், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்” என்றார்.
“ஸ்ரீராமனை கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னர் வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? அவர்களை நான் நமஸ்கரிக்க வேண்டும்” என்றார் அனுமன்.
அதைக்கேட்டு துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான்.
அப்போது அனுமன், கைகேயி பற்றி பிறர் அறியாத அவளது பெருமைகளைக் கூறத் தொடங்கினார்.
“பரதா! நீயோ, இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட விஷயம் இவ்வளவுதான். உனது தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை, உணர்ச்சிகளைக் கண்டவர். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் இருந்தபோது, தளதளவென பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான்.
ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தனது குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உனது மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்” எனச் சாபமிட்டாள்.
பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷி குமாரனான சிரவணன் குடுவையில் தனது தாய், தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் எடுக்க, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் நீ உயிர் நீங்கக் கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
தசரதர், ஸ்ரீராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தனது அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி முகூர்த்த தேதியை குறித்தார். பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தனது தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினையும் முடிசூட்டு நாள் குறித்தும் நன்கு ஆராய்ந்தாள் கைகேயி. அந்த முகூர்த்தப்படி ஸ்ரீராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்ய பாரத்தில் ராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடித்திருக்கும். புத்ர சோகம் தசரதனையும் முடித்திருக்கும்.
புத்ர சோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது ராமனை விட்டு தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உனது அன்னை. அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது ராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாட்கள் வனவாசம்தான். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகி விட்டது.
எந்தப் பெண் தனது சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? ராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தை அவள் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக ராவணன் வரை பல ராட்சசர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவமும் தியாகவும் புரிந்தது.