
காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பாளின் கோயிலுக்குள் கள்வப்பெருமாள் எனும் திருநாமம் தாங்கி ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ளார். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்தில் மூலவராக கள்வப்பெருமாள் அருள்புரிகிறார். தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியார்.
ஒரு சமயம் திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும் மகாலட்சுமி தாயாரும் வழக்கமாக அளவளாவிக் கொண்டிருந்தபோது அந்த உரையாடலானது தேவர்கள், அசுரர்கள், சொர்க்கம், நரகம், மாயை என்ற விதத்தில் அமைந்தது. அந்த சமயத்தில் மாயையில் அகப்படும் மானிடர்களுக்கு அருள முடிவு செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமியை பூலோகத்தில் அவதரிக்கச் செய்ய திருவுளம் கொண்டார். இதையறிந்த மகாலட்சுமியோ, 'அகந்தை' எனும் மாயையால் பீடிக்கப்பட்டவள் போல பேசத் தொடங்கினார். மாயையின் காரணமாக மகாலட்சுமி, “அழகில் சிறந்தவள் நானே” என கர்வம் கொண்டாள். ஒருவருக்கு கர்வமே எதிரியாக அமையும் என்பதை எல்லோருக்கும் உணர்த்த முடிவு செய்த மகாவிஷ்ணு, தனது திருவிளையாடலை துவக்கினார்.
தனது துணைவி என்றும் பாராமல் மகாலட்சுமியை சபிக்க, அவளுடைய அழகு மட்டுமின்றி, உருவமே இல்லாமல் அரூப நிலையை அடைந்தாள். ரூபம் இழந்து, அரூபமானாள் மகாலட்சுமி. அரூப லட்சுமியான மகாலட்சுமி, ‘ஸ்வாமி, கர்வமே சத்ரு என்பதை உணர்ந்தேன். சாபத்துக்கு விமோசனம் தந்தருளுங்கள்’ என வேண்டிக்கொண்டாள்.
மகாவிஷ்ணுவோ, ‘எங்கே ஒரு புண்ணியம் செய்தால் அது கோடி மடங்கு பெருகுமோ அத்தலத்திற்குச் சென்று தவம் செய்தால் சாபம் நீங்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். அத்தகைய சிறந்த நகரமான காஞ்சி மாநகருக்குச் சென்று அன்னை ஸ்ரீ காமாட்சி தவமியற்றிய திருத்தலத்திலேயே தவமியற்றினாள். காஞ்சிபுரத்தில் காயத்ரி மண்டபத்தில் அமர்ந்து கடும் தவம் புரிந்தாள்.
மகாலட்சுமியின் தவத்திற்கு மெச்சிய ஸ்ரீ காமாட்சி அம்பாள், கருணையே உருவாக ‘பிலாகாஸம்’ எனும் பகுதியில் இருந்து வெளிப்பட்டு மகாலட்சுமிக்கு எதிரில் காட்சி தந்தருளினாள். அரூபமாக உருவமே இல்லாமல் இருந்தவளின் முன்னால் காமாட்சி அம்பாள் நின்றதும் மகாலட்சுமியின் சாபம் தொலைந்து சாப விமோசனம் பெற்றாள்.
ஸ்ரீ காமாட்சி அம்பாள், ‘எனது பக்தர்கள் அரூப லட்சுமியாக இருக்கின்ற உன் மீது குங்குமத்தை வைத்து எடுத்துச் செல்வார்கள். இழந்த சௌந்தர்யத்தை மீண்டும் பெறுவதோடு மட்டுமல்லாமல், எனது பக்தர்களும் இழந்ததையெல்லாம் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள். அவர்களை ஆரோக்கியத்துடன் வாழச் செய்வாய்’ என அருளினாள்.
காஞ்சியம்பதியில் சாபம் விலக அரூபம் நீங்கி முன்பை விட அழகுமிக்க பேரழகியாகக் காட்சியளித்தார் மகாலட்சுமி. அங்கே அவரை கரம் பிடிக்க எண்ணிய மகாவிஷ்ணு அத்தலத்திற்கு வந்து தூணின் பின்னால் மறைந்து நின்று தாயார் தாம் வந்திருப்பதை உணர்கிறாரா என்று பார்த்தார். ஒரு கள்வனைப் போல மறைந்து நின்று பார்த்த காரணத்தினால் இத்தலத்தின் பெருமாளுக்கு ‘கள்வப் பெருமாள்’ என்ற திருநாமம் உண்டானது.
ஸ்ரீ காமாட்சி அம்பாள் கருவறைக்கு வெளியே உள்ள காயத்ரி மண்டபத்தின் சுவரில் தென்கிழக்கு திசை நோக்கி கள்வப் பெருமாள் தரிசனம் தருகிறார். பெருமாளுக்கு இடது பக்கமாக காமாட்சி அம்பாள் கருவறைச் சுவரில் மகாலட்சுமி தாயார் ஸ்வாமியை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
மகாலட்சுமி தாயார் கருவறையின் மற்றுமொரு சுவரில் அரூப கோலத்திலும் காட்சி தருகிறார். காஞ்சி காமாட்சி அம்பாள் சன்னிதியில் வழங்கப்படும் குங்குமப் பிரசாதத்தை காயத்ரி மண்டபத்தில் உள்ள அரூப லட்சுமியின் மேல் வைத்து வணங்கி பின்னர் பிரசாதத்தை எடுத்துச் செல்வது ஒரு மரபாகும். அரூப லட்சுமியை வணங்கிய பின்னரே பக்தர்கள் கள்வ பெருமாளையும் தாயாரையும் வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கள்வ பெருமாளுக்கு உகந்த நைவேத்தியமான தயிர் சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.
ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து நைவேத்தியங்களும் கள்வ பெருமாளுக்கும் படைக்கப்படுகிறது. இவர் குழந்தை வரம் அருளும் பெருமாளாகவும் குடும்ப ஒற்றுமையை நிலைக்கச் செய்யும் பெருமாளாகவும் விளங்குவதால் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு மேற்கண்ட பலன்களை அடைகிறார்கள்.