
அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. அந்த அதிசயங்களுக்கான விடைகளும் பலராலும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசயம் நிறைந்த, நம்மை வியக்கவைக்கும் விடை தெரியாத அதிசயம்தான் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் மழைக்காக வானத்தைப் பார்க்க மாட்டார்கள். மாறாக, அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிவார்கள். ஆம், மழை வருமா? வராதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோயில் உள்ளது. அது உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்திருக்கும் பகவான் ஜெகந்நாதர் ஆலயம்தான் அது.
சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. சொட்டும் நீரின் அளவைப் பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்கள் முன்பாகவே அந்தக் கோயிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. ஏழு நாட்களும் அந்த மழை நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை.
அந்தக் கோயிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் அந்த ஊரில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஈரப்பதம் மட்டும் இருந்தால் மிதமான மழை பெய்யும், நீர் துளிர்த்து தரையில் விழுந்தால் கனமழை என்று அர்த்தம். இதற்கான காரணத்தை கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு சொட்டும் நீரின் அளவைப் பொறுத்தே அந்த வருடத்தில் தங்கள் நிலத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு, இந்தக் கோயிலில் உள்ள கடவுளுக்கு வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர்.
கிழக்கு நோக்கிய இந்தக் கோயிலின் கட்டடக்கலை பாணி கிட்டத்தட்ட தனித்துவமானது. இது மிகவும் அசாதாரண வளைவு வடிவத்தைக் கொண்டுள்ளது. இதன் சிகரம் பண்டைய இந்தியாவில் நிலவும் புகழ் பெற்ற நாகராபாணி கோயில் கட்டுமானத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அதன் சிகரம் ஒரு தேர் போல ஒத்திருக்கிறது.
இக்கோயில், ஒரு அரசு அரண்மனையின் நுழைவாயிலை ஒத்திருக்கிறது. ஜெகந்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி ஆகியோரின் சிலைகள் கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. மகாவிஷ்ணுவின் அவதாரங்களும் தசாவதாரங்களும் பிரதான சிலையின் பின்னணியில் கருப்பு மணற் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. சேஷசாயி விஷ்ணு மற்றும் சூரிய தேவ் ஆகியோரின் பழங்கால சிற்பங்கள் இக்கோயிலின் முன்னறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள ஒரு குளமும் கோயில் வளாகத்தை அழகுபடுத்துகிறது.