புதுக்கோட்டை கீரனூரிலிருந்து 17 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி எனும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் கண் நிறைந்த பெருமாளை வழிபட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். திருஷ்டி தோஷங்கள் விலகும்.
குடைவரைக் கோவிலாக உள்ள இவ்விடத்தில், பெருமாள் நின்ற கோலத்தில் புண்டரீகாக்ஷன் ஆகவும், சயனக்கோலத்தில் அனந்த பத்மநாபன் ஆகவும், அமர்ந்த நிலையில் வைகுந்தநாதனாகவும் காட்சி அளிக்கிறார். திவாகரமுனிக்கு காட்சி கொடுத்த அரங்கன் இங்கு அனந்த பத்மநாப கோலத்தில் காட்சி தருகிறார்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் இது. இங்கு அஷ்ட லக்ஷ்மிகளை நாம் தரிசிக்கலாம். அரங்கன் திருமார்பில் ஒரு லக்ஷ்மியும், திருவடியில் பூமிதேவித்தாயார், புண்டரீக பெருமாள் மற்றும் வைகுண்டநாதருக்கு அருகே சீதேவி மற்றும் பூதேவிகளாக இரண்டிரண்டு லக்ஷ்மிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லக்ஷ்மியும், தீபஸ்தம்பத்திற்கு அருகே தீபலட்சுமியாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்.
அரங்கனுக்கு முன்புறம் அரிநேத்ர தூண்கள் என்று இரண்டு தூண்கள் உள்ளன. நம் வருகை முதல் பிரார்த்தனை வரை அனைத்தையும் இத்தூண்கள் சாட்சியாக இருந்து பெருமாளிடம் பரிந்துரைக்கின்றன என்பதே ஐதீகம்.
திவாகரமுனிக்கு அரங்கனின் மீது அபார அன்பு. அவரை தரிசிக்காமல் உண்ணமாட்டார். ஒரு நாள் கால் போனபடி அரங்கனை தேடி போனார். பசியில் தள்ளாடிய போது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அரங்கன் கோவில் பற்றிய தகவல் கேட்டார். 'அதோ அந்த மலைக்கு கீழ் இருக்கிறார்' எனக் கூறி ஓடிவிட்டான் சிறுவன்.
அவன் கூறிய இடம் குகையாக இருக்க, அங்கே அரங்கன் பாம்பின் மீது படுத்துக் கிடக்க, பூதேவி, கின்னரர், வானவர் அவரை வணங்குவது தெரிந்தது. காய்கனிகளை படைப்பதற்காக சென்று வந்தவர், அங்கு எதுவுமே இல்லாதது கண்டு அங்கிருந்த ஆடு மேய்க்கும் சிறுவனிடம் 'சாமியெல்லாம் எங்கே?' எனக் கேட்க, அவன் சிரித்து, அரங்கனாய் காட்சி தந்தான். திவாகர முனிவருக்கு நின்ற, அமர்ந்த மற்றும் சயனக் கோலங்களை காண்பித்தார்.
திருவனந்தபுரம் போலவே, இக்கோவில் பெருமாளை மூன்று வாசல்கள் வழியாக தரிசிக்க வேண்டும். தூண்களின் இடையே மூன்று வாயில்கள் வழியாக பெருமாளை தரிசிப்பதன் மூலம் பித்ரு சாபம் நீங்கும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்டதாக இக்கோவில் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கண் பிரச்னை உள்ளவர்கள் இந்த பெருமாளை சேமித்து பிரச்சனையிலிருந்து விடுபடுவதாக அறியப்படுகிறது.