
பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவதை கவனித்திருப்போம். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கவே பக்தர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆண்டி கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால், நாமும் ஆண்டி ஆகிவிடுவோம் என்ற மூட நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது என்பதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்று பழனியாகும். பழனியில் உள்ள முருகப்பெருமானின் ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக்கூடிய நிலையாகும். முருகர், அலங்காரம் எதுவும் இல்லாமல் ஆண்டி கோலத்தில் இருப்பார்.
தண்டாயுதபாணி சிலை வெறும் நவபாஷாணத்தால் ஆனது. முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் பார்க்கும் போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உருவாகும்.
ஆண்டி அலங்காரத்தில் வெறும் கோவணத்தை சூடியிருப்பார் தண்டாயுதபாணி. ஆகையால் ஆண்டி கோலத்தில் இருக்கும் நவபாஷாண முருகரை தரிசிக்க வருபவர்களுக்கு நவபாஷாணத்தின் முழுமையான பாசிட்டிவ் கதிர்வீச்சு கிடைக்கும். திங்கட்கிழமை காலையிலேயே மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி படிப்படியாக மாற்றங்கள் உண்டாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் போட்டி, பொறாமை, கஷ்டம், தடை போன்றவை நீங்க ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனி முருகனை தரிசனம் செய்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள் இருந்தாலும், அந்த கிரகங்களால் ஏற்படும் பாதிப்பும், தாக்கமும் குறைய வேண்டுமென்றால் பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பதே தீர்வாகும்.
தவறான வழியில் செல்வங்களையும், பொருளையும் தேடக்கூடாது. அது சங்கடங்களைத் தரும். எதுவுமே வேண்டாமென்று விட்டுவிட்டால், உன்னை தேடி அனைத்துமே வரும் என்பது தான் தண்டுக்கொண்டு கோவணத்தோடு நிற்கும் முருகப்பெருமானின் ஆண்டி கோலம் உணர்த்துவது. 'நீ அனைத்தையும் விட்டுவிட்டால், ராஜாவாக இருப்பாய்' என்பதை உணர்த்தவே ராஜ அலங்காரம். எனவே, இந்த இரண்டு அலங்காரங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும். ஆகவே, பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நமக்கு நற்பலன்கள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.