
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சேத்துப்பட்டு அருகே உள்ளது நெடுங்குணம். ஸ்ரீ ராமர் என்றாலே வில்லும் அம்பும் தரித்து சீதை, லட்சுமணன், அனுமனுடன் காட்சி தருவார். ஆனால், இங்குள்ள ஸ்ரீராமரோ கோதண்டம் ஏந்தி ஆயுதங்கள் ஏதுமின்றி அமர்ந்த கோலத்தில் வலது கை சின் முத்திரையுடன் திருமார்பில் கை வைத்தபடி கண்களை மூடிய நிலையில் யோக ராமராக காட்சி தருகிறார். இந்த அபூர்வ திருக்கோலம் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஸ்ரீ யோக ராமர் கோயில் கோபுரம் மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது. முகப்பு கோபுரம் ஏழு கலசங்கள் கொண்டு 6 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரமாகவும் இன்னொரு கோபுரம் ஐந்து கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரமாகவும் திகழ்கிறது.
கலைநயம் மிக்க சிற்பங்கள் கொண்ட மண்டபத் தூண்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றன. ஏறக்குறைய 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீராமர் கோயிலாகும். இக்கோயிலின் தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தனிச்சன்னிதியில் செங்கமலவல்லித் தாயார் காட்சி தருகிறார்.
கண்களை மூடி, யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீராமரின் அருகே சீதா பிராட்டி அமர்ந்த நிலையில் வலது கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகின்றார். இடது கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபய ஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ஸ்ரீராமருக்கு வலது புறம் கைகளை குவித்து அஞ்சலி செலுத்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சீதாராமனுக்கு எதிரே அனுமன் பிரம்ம சூத்திரம் படித்தபடி காட்சி தருவது மேலும் சிறப்பானது. வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாக இது விளங்குகிறது.
ராவணனை வதம் செய்து விஜயராகவனாக சீதா பிராட்டியை அழைத்துக்கொண்டு அயோத்தி திரும்பும் வழியில் ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் ஆசிரமத்திற்கு வந்து செல்லுமாறு வேண்டுகின்றனர். இங்கு வசித்து வந்த சுகப்பிரம்ம ரிஷியும் வேண்டிக்கொள்ள ஸ்ரீராமபிரான் இங்கே தங்கிச் சென்றதாக வரலாறு.
யுத்தம் முடிந்து விஜயராகவனாக அயோத்தி திரும்புவதால் அவரது கரத்தில் வில் அம்பு போன்ற ஆயுதங்கள் ஏதுமின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தல ஸ்ரீராமரை வணங்க மன அமைதி, சந்தோஷம், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டுகள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. சித்திரை மாதத்தில் இக்கோயிலில் தேர் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு ஏழரை மணி வரை திறந்திருக்கும்.