விநாயகப் பெருமானுக்கு மிக உகந்த சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு!

Sri Ganapathi
Sri Ganapathi
Published on

ரு சமயம் சிவபெருமானை தரிசிக்க பிரம்மா திருக்கயிலாயத்திற்குச் சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்குக் கொடுக்கும்படி பிரம்ம தேவன் சிவபெருமானிடம் கூறினார். சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப் பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்ம தேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோபப் பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது.

தனது தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி ‘முழு முதல் பெருமானே, எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்’ என்று சொல்லி இரு கரங்குவித்து தனது தலையை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார். இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள், பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து இகழ்ச்சியுடன் சிரித்தான்.

இதையும் படியுங்கள்:
பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்!
Sri Ganapathi

அதையடுத்து, சந்திரனின் மீது விநாயகரின் கோபப் பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில் அடக்கமின்றி சிரித்த சந்திரனே, உனது பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக் கடவது. உனது பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது.

இதனால் பௌர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறாமல் போனது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும் தேவர்களும் சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக் கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தி அன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்துவிட்டார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தி அன்று விரதம் இருந்து தம்மை வழிபடுவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணியப் பேறுகளை அடைவர்’ என்றும் திருவருள் புரிந்தார்.

இதையும் படியுங்கள்:
தரித்திரம், பீடைகளைப் போக்கும் சித்தர் ஜீவ சமாதி வழிபாடு!
Sri Ganapathi

இதைக் கேட்ட சந்திரன் தனது தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர், அவனுக்கு அருள்புரிந்து மீண்டும் வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது ஆனது.

வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால் நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வருகின்றன. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com