மனித உயிரின் சூத்திரக் கயிறாக விளங்கும் அக்னி தேவன்!

Agni bhagavan
Agni bhagavan
Published on

க்னி தேவன் என்பவர் யார்? அக்னி வெளிப்பட்டபோது நிகழ்ந்தது என்ன?  அக்னிக்கும் நம் உடம்பிற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அக்னி நம்முடைய ஸ்தூல தேகத்தின் அன்றாட இயக்கங்கள் அனைத்தும் சீராக நடைபெற உதவி புரிகிறது. வெளிக்காற்று மண்டலத்தில் பிராண வாயுவாக கலந்துள்ள அக்னி, நாம் அன்றாடம் விடும் மூச்சுக் காற்றின் வழியாக சுவாசித்தலின் மூலமாக நம் உடம்பில் தொடர்பு கொள்கிறது.

அக்னி நம் உடம்பில் ஜாடராக்னி, காயாக்னி, காலாக்னி, மூலாக்னி, காமாக்னி என்று பஞ்சாக்னியாக செயல்படுகின்றது. சகல உயிரினங்களும் மண்ணுலகில் ஜீவித்திருக்க வேண்டுமானால் இந்த பஞ்சாக்னி அவசியம் தேவைப்படுகிறது. இந்தப் பஞ்சாக்னியே நம் உடலில் மும்மலங்களாக உள்ள வாதம், பித்தம், கபம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் குரலில் ஒலிக்கப்போகும் கந்த சஷ்டி கவச சாதனை முயற்சி!
Agni bhagavan

மனித வாழ்க்கையின் சுவாரசியம் மிகுந்தது அக்னி கலையின் இயக்கம்தான். உடல் சடலத்தின் வசம் (சில்லென்று) சென்று விடாமல் பாதுகாக்கும் பொறுப்பு அக்னி கலையின் வசமே உள்ளது. அக்னி கலையை உடம்பில் வெற்றிகரமாக செயல்படுத்துவது நாபியே. இந்த நாபியானது, அக்னி கலையை அதோமுகமாக கீழ் நோக்கி இழுக்கிறது. வயிற்றுப் பகுதியில் (தீனிப்பையில்) பற்றி எரியும் நெருப்புக் கோளமாக உள்ளது. அதனாலேயே நம் முன்னோர்கள் நாபியை 'அக்னி குண்டம்' என அழைத்தனர்.

நெருப்பு என்பது சுடும் தன்மை உடைய தீ (Fire) எனப்படும். அதுவே சகலத்தையும் சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விடும். மனித தேகத்தில் உள்ள அக்னி என்பது வேறு. அதுவே நம்முடைய தேகத்தில் அனல் என்ற (Thermal energy) வடிவில் உள்ளது.

‘பஞ்சபூதங்களில் அக்னி என்பது ஒன்றா?’ என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில்தான் நமக்கெல்லாம் ஆச்சரியத்தை அளிக்கிறது. பஞ்சபூதங்களின் கோர்வை என்பது பிரித்வி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம் என்பதாகும். பஞ்சபூதங்கள் படைக்கப்பட்டபோது அதில் அக்னி என்பது அறவே கிடையாதாம். அக்னியின் மூலமாக தேயுதான் நிறைந்து இருந்தது என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விதவிதமான கோலத்தில் அருளும் சிவலிங்க அருட்தலங்கள்!
Agni bhagavan

அப்படியென்றால் தேயு என்பது தேஜோமய திவ்ய ஜோதி பிரகாசமாகும். அதுவே அம்பிகையின் பர சொரூபமாகும். பிரம்ம சிருஷ்டியின் தொடக்கத்தில் தேயுவின் எல்லையில்லாத மகத்தான சக்தியே இப்பிரபஞ்சம். அனைத்தும் தேயுவின் ஒளி வெள்ளமாக எங்கும் பரவி இருந்தது. அக்னியின் அம்சம் என்பது தேயுவில் ஒடுங்கி இருந்தது.

அக்னி பகவானின் தோற்றம்: அக்னி பகவானுக்கு இரண்டு தலைகள், மூன்று கால்கள், ஏழு திருக்கரங்கள். இவரது வாகனம் மேஷம். இப்படிப்பட்ட திவ்ய திருத்தோற்றம் கொண்டவரே அக்னி பகவான் ஆவார்.

பரமேஸ்வரனான நடராஜ மூர்த்தி அந்த அக்னியை நிர்வகிக்கும் பொறுப்பை ஒரு தெய்வத்திடம் அளிக்க, அவரே அக்னி பகவான் என்ற திருநாமத்தால் அழைக்கப்பட்டார். அக்னியின் துணையின்றி இந்த ஜகத்தை நடத்திச் செல்ல அந்தத் தேயுவின் அம்சத்தில் இருந்து அக்னியை தனியே பிரித்து எடுக்க வேண்டி இருந்தது. காரணம், அக்னியின் துணையின்றி ஜடத்தை அசைக்கவோ, இயக்கவோ, நகர்த்தவோ முடியாது. ஸ்தூல, சூட்சுமத்தை இணைக்கும் பாலமாக இருப்பது அக்னியே. அந்த ஒப்பற்ற தெய்வீகப் பணியை நடத்தி முடித்தவர் நடராஜப் பெருமானே ஆவார்.

இதையும் படியுங்கள்:
சிவ மகாபுராணம் படிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன தெரியுமா?
Agni bhagavan

ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருகரங்களில் ஒரு அபூர்வ பொருள் ஒன்று இருந்தது. அதுவே 'தீச்சட்டி' ஆகும். அதில் 'அக்னி' என்ற தகிக்கும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவ்வாறு அக்னி முதன்முதலாக வெளிப்பட்டபோதுதான் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் இயக்கம் அனைத்தும் அசைந்து இயங்கத் தொடங்கியது.

பிரம்ம சிருஷ்டியின் முதல் தொடக்கத்தின்போது அண்ட சராசரங்கள், நட்சத்திரங்கள், புவனங்கள், கோள்கள், சூரிய, சந்திர மண்டலங்கள் என பரமாத்மாவின் சங்கல்பத்தினால் படைக்கப்பட்ட இவை யாவும் சற்றும் அசைவில்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. பிரபஞ்சத்தை அசைத்து, இயக்க திரு உள்ளம் கொண்ட பரமனின் தெய்வீக அம்சத்திலிருந்து தோன்றியவரே நடராஜப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவருடைய திரு நடனம் துவங்கியவுடன் பிரபஞ்சத்தில் சகலமும் உயிர்பெற்று அசையத் தொடங்கியது. அன்று தொடங்கிய நடராஜப் பெருமானின் அத்திருநடனத்தை நம் முன்னோர்கள் ‘ஆருத்ரா தரிசனம்’ எனக் கூறி நடராஜரை போற்றிப் பணிந்தார்கள்.

உண்பது, உறங்குவது, மூச்சு விடுதல், பேசுதல் மற்றும் ஸ்திரீ சேர்க்கை ஆகிய இவையே நடராஜப் பெருமான் சகல உயிரினங்கள் மேல் நடத்தும் நித்திய நடனம் ஆகும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த படைப்பின் உண்மை அது. எனவே, ஐவர் நடனத்தில் அடங்காத உயிரினங்களே இல்லை என்று கூறலாம்.

இதையும் படியுங்கள்:
தேவேந்திரன் பூஜை செய்யும் அமிர்த சொரூப விநாயகர் அருளும் திருத்தலம்!
Agni bhagavan

அக்னி தேவனின் முக்கியத்துவம்:

சகல ஜீவன்களும் அக்னி தேவனின் ஆட்சிக்கு உட்பட்டவர்களே. தேவர்களும் அக்னியின் துணையை நம்பி இருப்பவர்களே. யாகத்தின் பலனாக உள்ள 'அவிர் பாகத்தை' தேவர்களுக்கு பகிர்ந்து அளிப்பவரும் அக்னி பகவானே. தசரத மகாராஜாவிற்கு புத்திரப் பேற்றை அளித்ததும் அக்னியே. சீதா தேவி அக்னி பிரவேசம் புரிந்தபோது, 'கற்புக்கரசி 'என நிரூபித்ததும் அக்னி தேவனே. அது மட்டுமல்லாமல், கற்புக்கரசிகளின் நாவிலிருந்து வெளிப்பட்டு சகலத்தையும் சுட்டெரித்த உஷ்ண சக்தியும் அவரே.

சுருக்கமாக, அக்னி என்பது நமது உடலில் இரத்தம் வடிவில் உள்ளது. நெருப்பின் நிறம் சிவப்பு. அதுபோல் இரத்தத்தின் நிறமும் சிவப்பு. எப்படி இரும்பை பழுக்க காய்ச்சி அதனை குழம்பு போலாக்கி ஓட விடுவார்களோ, அது போல இரத்தமும் நமது உடம்பில் கொழகொழவென்று அக்னியின் ஒளி வடிவில் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டுள்ளது. ஜடத்தின் வடிவமாக இருக்கும் நமது உடலை இயக்க அனல் சக்தியின் தங்கு தடையில்லா வெப்ப சக்தி தேவைப்படுகிறது. மூச்சுக் காற்றின் வழியாக உள்ளிழுக்கப்படும் பிராண வாயுவை இரத்த ஓட்டமே உடலெங்கும் பாய்ந்து சென்று நம்முடைய உடம்பில் உள்ள கோடிக்கணக்கான செல்கள், திசுக்களுக்கு திட சக்தியை அளித்து அதனை அழுகிக் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வருகிறது. இரத்தம் உறைந்துபோனால் மரணம்தான் மிஞ்சும் என்பதை நன்கு அறிந்திருந்த சித்தர்கள் அக்னியின் செயலையை, 'சூத்திரக் கயிறு' என அழைத்தார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com