
புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில். இக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இது108 வைணவத் தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த கோயில். இக்கோயில் கருவறையில் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் அருகே ஸ்ரீ சத்யகிரீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் உள்ளது. திருமெய்யம், ஸ்ரீரங்கத்தை விட பழைமையானது. இத்தலம் சைவ, வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்குகிறது.
இக்கோயில் கருவறை பெருமாள் அரவணையில் படுத்திருக்க, மது கைடபர்கள் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி பூதேவியை அபகரிக்க முயல, அவர்கள் பெருமாள் திருவடியில் சரணடைய பெருமாளின் நித்திரையை கலைக்க விரும்பாத ஆதிசேஷன் நாகம் விஷத்தைக் கக்க அரக்கர்கள் பயந்து ஓடினார்கள்.
தனது இச்செயலுக்காக பெருமாள் தன் மீது கோபப்படுவார் என ஆதிசேஷன் நினைக்க, பெருமாளோ அவரை மெச்சிப் புகழ்ந்தததாக இத்தல வரலாறு கூறுகிறது. சிவபெருமானே நாரதருக்கு இத்தலத்துப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்தியம் மற்றும் தர்ம தேவதைகள் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு கவலையில்லா மனமும் நீண்ட ஆயுளும் தருவதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதை ஆதிரங்கம் என்றும் கூறுகிறார்கள்.
இந்தத் தலத்தில் சிவபெருமானையும் திருமாலையும் ஒரே வாயிலில் சென்று தரிசிக்கும் வண்ணம் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் பாண்டியர்களால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. மண்டபத் தூண்களில் மதுரை வீரன் பொம்மியைக் கடத்திச் செல்லும் சிற்பத் தொகுப்பு, குறவன் குறத்தி நடனமாடும் மங்கையர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
மேற்கில் உஜ்ஜீவனத் தாயார் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாள் மேற்கில் தலை வைத்து கிழக்கில் காலை நீட்டி துயில் கொள்கிறார். சுமார் 30 அடி நீளமும் 9 மீட்டர் நீளத்தில் குகை முழுவதும் வியாபித்துக் காட்சி அளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மா உள்ளார். ஆதிசேஷன் பின்னால் கருடன் காட்சி தருகிறார். இவர்கள் அருகே தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு ஆகியோர் உள்ளனர்.
இத்தலத்தில் ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற திருக்கோலத்தில் வலது கை அபய முத்திரையும் சங்கு, சக்கரம் ஏந்தி கிரீடம் மகர குண்டலம் அணிந்து காட்சி தருகிறார். அவரையடுத்து மகாலட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.