
திருமாலின் சயனக் கோலங்கள் என்பது பகவான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பலவிதமான நிலைகளைக் குறிக்கும். இந்த நிலைகளில், வெவ்வேறு தோற்றங்களில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் மகாவிஷ்ணுவின் சயனக் கோலங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
1. ஜல சயனம்: பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலம் இது. 108 திவ்ய தேசங்களில் 107வது தலமான திருப்பாற்கடலைக் குறிக்கும். இந்த நிலையை மக்கள் தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க இயலாது. பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்க, திருமகள், பூமி தேவி மற்றும் திருமகள் ஆகியோருடன் காட்சி தரும் கோலம் இது. ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதரை தரிசிப்பது ஜல சயனத்தில் இருக்கும் பெருமாளை தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
2. தல சயனம்: தல சயனம் என்பது திருமாலின் படுத்திருக்கும் கோலத்தைக் குறிக்கும். இது பெருமாளின் 10 வகையான சயனக் கோலங்களில் ஒன்று. திருமால் தரையில் பள்ளிகொண்டு, வலது கையை மார்பில் உபதேச முத்திரையுடன் வைத்திருப்பார். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் இந்தக் கோலத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். 108 திவ்ய தேசங்களில் 63வது தலமான இது, புண்டரீக மகரிஷிக்கு காட்சி அளித்ததைப் போலவே தரையில் படுத்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.
3. புஜங்க சயனம்: புஜங்கம் என்றால் பாம்பு. சயனம் என்றால் படுக்கை. பாம்பின் படுக்கையில் சயனித்திருக்கும் கோலம் இது. திருவரங்கத்தில் அரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீரங்கத்தை தவிர, கோவிலடி எனும் திருப்பேர்நகர் போன்ற வேறு சில கோயில்களிலும் புஜங்க சயனத்தில் பெருமாளை தரிசிக்கலாம். புஜங்க சயனம் என்பது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
4. உத்தான சயனம்: உத்தான சயனம் என்பது பெருமாள் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் நிலையில், சற்றே எழுந்து அமர்ந்திருக்கும் ஒரு தோற்றம். இந்நிலையில் பெருமாள் தனது ஒரு கையை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, மற்றொரு கையால் தரையில் ஊன்றியபடி காட்சி தருவார். திருக்குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி திருக்கோயிலில் திருமழிசை ஆழ்வாருக்காக உத்தான சயனத்தில் ஆராவமுதனாகக் காட்சி தருகிறார்.
5. வீர சயனம்: வீர சயன திருக்கோலத்தில் திரு இந்தளூரில் காட்சி தரும் இவர், நான்கு திருக்கரங்கள் கொண்டுள்ளார். வலக்கரங்களில் சக்கரமும், தலையணையும், இடக்கரங்களில் ஒன்று சங்கேந்தியும் மற்றொன்று திருமேனிக்கு இணையாகவும் பரந்திருக்கும். திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாளும் வீர சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் வலது கையை மார்பில் வைத்து ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார். இவரை வணங்க பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் பெருகும் என்று நம்பப்படுகிறது.
6. தர்ப்ப சயனம்: திருப்புல்லாணியில் ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் தர்ப்பை புற்களால் ஆன படுக்கையில் சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமர் சேவை சாதிக்கிறார். பட்டாக்கத்தியுடன் வீர சயனராக பெருமாள் காட்சி தரும் தலம் இது. திருவடியில் ராவணனின் தூதுவரான சுகர், சாரணனும், பிருகு முனிவர், வீர ஆஞ்சனேயரும் காட்சி தருகின்றனர்.
7. வடபத்ர சயனம்: வடபத்ரம் என்றால் ஆலிலை. 99வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் பெருமாள் ஆலமரத்தின் இலையில் பள்ளி கொண்டு கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். வடபத்ர சாயி அல்லது ஸ்ரீரங்கமன்னார் என்று போற்றப்படும் இவரை தரிசிக்க கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
8. போக சயனம்: சிதம்பரத்தில் உள்ள திருசித்திரக்கூடத்தில் நான்கு திருக்கரங்களுடன் கரிய திருமேனியுடன் காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் இது 40வது திவ்ய தேசமாகும். போக சயனத்தில் இருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும், புண்டரீகவல்லித் தாயாரையும் தரிசிப்பது சிறப்பு.
9. மாணிக்க சயனம்: 61வது திவ்ய தேசமான திருநீர்மலையில் மலையின் மேல் ஸ்ரீரங்கநாதர் ரங்கநாயகி சமேதராக சதுர் புஜங்களுடன் பாம்பணையில் மாணிக்க சயனமாக பள்ளிகொண்டுள்ளார். ஸ்ரீரங்கநாயகி, பிருகு முனிவர், மார்கண்டேயருக்கு இங்கு காட்சியளித்தவர் இவர். இக்கோயிலில் பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் அருளுகிறார்.
10. உத்தியோக சயனம்: பெருமாள் உத்தியோக சயனத்தில் யோக நிலையில் அமர்ந்திருப்பது போல படுத்திருப்பார். கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் உத்தியோக சயனத்தில் பெருமாளை தரிசிக்கலாம்.