சகல செளபாக்கியங்களும் தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்!

Aadi Velli Amman worship
Aadi Velli Amman worship
Published on

வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று அழைக்கப்படுவது வெள்ளிக்கிழமைதான். சிங்கத்தின் மீது பவனி வரும் அம்பிகையை வெள்ளிக்கிழமையன்று நாம் வழிபடும்போது வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற வழி பிறக்கும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்குமே ஒரு சிறப்பு உண்டு. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம்தான் ஆடி. ஆடி வெள்ளிக்கிழமையன்று மாலையில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் பலன்கள் அனைத்தும் வந்து சேரும்.

இதையும் படியுங்கள்:
திருமால் கொண்ட 10 வகை சயனக் கோலங்களை அறிவோமா?
Aadi Velli Amman worship

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் பெருகும். ஆடி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம். பொருளை அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமியை திருமகள் என்கிறோம். எட்டு வகை லட்சுமிகளின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கையை நடத்த இயலும். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதம் வருகிறது.

ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாம். அம்மனை குளிர்விக்க தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து அம்மன் முன் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்க வேண்டும். இதனால் நோய் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.

இதையும் படியுங்கள்:
பிரம்மா ஏன் படைக்கிறார்? விஷ்ணு ஏன் காப்பாற்றுகிறார்? சிவன் ஏன் அழிக்கிறார்?
Aadi Velli Amman worship

ஆடி வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியை வரவேற்று வீட்டில் பூஜை செய்து உபசரித்தால் மகாலட்சுமி அருள் கடாட்சம் கிடைக்கும் என்பது உறுதி. ஆடி வெள்ளிக்கிழமையன்று சில ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். சில கோயில்களில் நாக தேவதைக்கு பால் எடுத்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களையும் ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒரு சமயத்தில் அர்ச்சிக்கும் நவசக்தி அர்ச்சனை நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீவித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீசக்கரமே தாடங்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் மகாலட்சுமியாகவும், உச்சிகால வேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சி தருவாள்.

இதையும் படியுங்கள்:
'பீட' மாதமாம் ஆடி மாத விழாக்களும் அதன் மகத்துவ சிறப்புகளும்!
Aadi Velli Amman worship

புதுச்சேரியில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் தேவியின் வீதி உலாவும் நடைபெறும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை செந்தாமரை மலரை கொண்டு பூஜிக்க வேண்டும். வீட்டு பூஜையறையில்  ஹ்ருதய கமலம் தாமரை பூ போன்ற மகாலட்சுமிக்கு பிடித்தமான கோலங்களைப் போட வேண்டும். கோலம் போடும்பொழுது மகாலட்சுமியே வரவேண்டும் என்று ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே போட வேண்டும்.

குத்து விளக்கை முந்தைய நாள் இரவே தேய்த்து குங்குமம் வைத்து ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து பூமாலை கொண்டு அலங்கரித்து பஞ்சு திரி போட்டு குளம் போல எண்ணெய் அல்லது நெய் விட்டு தீபச் சுடர் கிழக்கு முகமாக இருக்குமாறு விளக்கை ஏற்ற வேண்டும்.

மகாலட்சுமி படத்திற்கு பொட்டிட்டு பூக்கள் அலங்கரித்து உதிரி பூக்களால் மகாலட்சுமி அஷ்டோத்திரங்களைக் கூறி அர்ச்சனை செய்து அம்மனுக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். ஆடி வெள்ளிக்கிழமையன்று உங்கள் வீட்டிலும் வழிபாடு செய்து, அருகிலுள்ள அம்மன் ஆலயம் சென்று வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com