கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் ஸ்ரீமுஷ்ணம். இங்கு அமைந்துள்ள பூவராக ஸ்வாமி கோயிலில் பூவராகப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்த காரணத்தினால் வராகத்திற்கு மிகவும் பிடித்தமான கோரைக்கிழங்கைப் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படும் கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம் எனும் கோரைக்கிழங்கு லட்டு தினமும் காலை பத்து மணிக்கு திருமஞ்சனம் முடிந்த பின்னர் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள் பல நிறைந்த இந்த கோரைக்கிழங்கானது, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் கோரைக்கிழங்கு முஸ்தா என்று அழைக்கப்படுகிறது. கோரைக்கிழங்கு, அரிசி மாவு, பூரா சர்க்கரை, ஏலக்காய், நெய் முதலான பொருட்களைக் கொண்டு கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம் தயார் செய்யப்படுகிறது.
மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். பூமியை கவர்ந்து சென்ற இரண்யாட்சன் என்ற அசுரனை வதம் செய்து, வராக ரூபத்தில் பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து நிலைக்கச் செய்தார்.
ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஸ்ரமம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய எட்டு க்ஷேத்திரங்களும் சுயம்பு க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வைஷ்ணவர்கள் இத்தகைய தலங்களை ‘ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்’ அதாவது தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று அழைக்கிறார்கள்.
மேற்கு திசை நோக்கி ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம். கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால் கருவறையின் முன்னால் ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் பூவராகப் பெருமாள் மூலவராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் ஸ்ரீ வராகப் பெருமாள் இடுப்பில் கை வைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.
மேற்கு திசை நோக்கி வராகரின் திருமேனி அமைந்துள்ளது. அவரது திருமுகம் தெற்கு பார்த்தபடி அமைந்துள்ளது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இத்தலத்தில் வராக மூர்த்தியாக இரண்டு திருக்கரங்களுடன் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காட்சி தந்து அருளுகிறார்.
உத்ஸவர் ‘யக்ஞ வராகர்’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். யக்ஞ வராகர் பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர். இத்தலத்துத் தாயாரின் திருநாமம் அம்புஜவல்லி என்பதாகும். ஒரு தனி சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
வடக்குத் திருச்சுற்றில் ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரத்தின் அருகில் மகேஸ்வரி, சாமுண்டி, வராகி போன்ற சப்த மாதர்கள் சன்னிதியும் அமைந்துள்ளன. திருச்சுற்றில் உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன.
காலை ஆறு மணி முதல் பகல் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை மணி வரையிலும் இத்தலம் பக்தர்கள் வழிபடத் திறந்திருக்கும். விருத்தாசலத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் அமைந்துள்ளது.