
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால், கோயிலை வலம் வருவது மிகவும் முக்கியமானதாகும். அப்படி வலம் வரும்போது மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றலால், நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மையான ஆற்றல்கள் பெறுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கோயில்களை வலம் வரும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் பலன்களும் மாறுபடும்.
விநாயகர் கோயில்: ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.
முருகர் கோயில்: ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
அம்மன் கோயில்: ஐந்து முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மன அமைதி கிடைக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் அம்பிகையின் கோயிலுக்குக் சென்று ஐந்து முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் கோயில்: ஐந்து முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும். பிறவா நிலை ஏற்படும்.
பெருமாள் கோயில்: மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்ட லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.
நவகிரகங்கள்: ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் நீங்கும்.
இப்படி எந்த தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் எனத் தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, முடியாதவர்கள் பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வலம் வரும் எண்ணிக்கையும் பலன்களும்:
1 முறை வலம் வந்தால் இறைவனிடம் நெருங்க முடியும்.
3 முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
5 முறை வலம் வந்தால் திருப்பங்கள் நிறைவேறும்.
7 முறை வலம் வந்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
9 முறை வலம் வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
11 முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி அடையும்.
13 முறை வலம் வந்தால் பிரார்த்தனை நிறைவேறும்.
15 முறை முறை வலம் வந்தால் செல்வம் பெருகும்.
17 முறை வலம் வந்தால் தானிய வளம் பெருகும்.
19 முறை வலம் வந்தால் நோய் தீரும்.
21 முறை வலம் வந்தால் கல்வி வளர்ச்சி பெருகும்.
27 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
108 முறை வலம் வந்தால் சகல நலன்களும் கிடைக்கும்.
208 முறை வலம் வந்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.
வழிபாட்டிற்காக மனத்தூய்மையுடன் நாம் ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு வரும்போதும் நம்மை அறியாமல் கோயிலை ஒரு முறை சுற்றி வலம் வருகிறோம். அப்படி கோயிலை சுற்றி வலம் வரும்போது நமக்கு புண்ணியங்கள் வந்து சேர்வதாக ஐதீகம்.
முக்கியமாக நமது முன்ஜன்ம பாவங்கள் ஒவ்வொன்றாக விலகி நம் பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபடுகிறோம் என்றும் நமது முன்னோர்கள் சொல்வது உண்டு. தினமும் கோயிலை வலம் வருவதால் எல்லா தெய்வங்களையும் ஒருசேர வலம் வந்த புண்ணியம் உண்டாகும்.
பௌர்ணமி, கார்த்திகை, திங்கள் சோமவாரம், வெள்ளி என குறிப்பிட்ட நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும்.
கோயிலுக்குள் செல்லும்போது ஈர ஆடைகளுடன் செல்லக் கூடாது. கோயிலை வேகமாக, எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருவது கூடாது. நிதானமாக, பேசாமல் இறை உணர்வுடன் வலம் வர வேண்டும்.
தெய்வ வழிபாட்டின் மிகச் சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதேயே வலம் வருதல், சுற்றி வருதல் என்றும், முன் ஜன்ம பாவங்கள் விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கோயிலை சுற்றி வலம் வருவது ஒரு புண்ணியச் செயல். கோயிலை வரும்போது இறைவனை நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.