‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கற்றுத் தரும் ஆன்மிகப் பாடம்!

A spiritual lesson taught by 'Manjummal Boys'
A spiritual lesson taught by 'Manjummal Boys'

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ எனும் தலைப்பைப் படிப்போருக்கு, ‘ஆன்மிகப் பகுதியில் சினிமா விமர்சனமா?’ என்ற எண்ணம் வருவது இயற்கையே. எப்படி சில சினிமா பாடல்களைக் கேட்கும்பொழுது அதில் இறை நம்பிக்கையை நம்மால் உணர முடியுமோ, அப்படித்தான் சமீபத்தில் பார்த்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திலும் ஒரு தெய்வீகப் பாடத்தை உணர முடிந்தது.

இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்றுதான். நண்பர்கள் குழு ஒன்று கொச்சியில் உள்ள மஞ்சும்மல் என்ற ஊரிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல உற்சாகமாகப் புறப்படுகிறார்கள். கொடைக்கானலில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும்போது அவர்கள் கண்களில், ‘குணா குகை’ என்ற பலகை பட, அந்த குகைக்குள்ளேயும் சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதியைத் தாண்டி சென்று பார்க்க, எதிர்பாராத விதமாக ஒரு நண்பன் அந்த குகையின் படுகுழியில் விழுந்து விட, அந்த நண்பனை எப்படி இந்த குழுவில் சென்ற ஒரு நண்பன் குகைக்குள் இறங்கி காவல் துறையினரின் உதவியோடும் மற்ற நண்பர்களின் துணையோடும் காப்பாற்றுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

‘இதில் எங்கே வந்தது தெய்வீகம் என்கிறீர்களா?’ வாழ்க்கையில் இளமையின் வேகத்தில் நாம் என்ன செய்கிறோம்? உண்மையான மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது? எதில் இருக்கிறது என்று தெரியாமல், புரியாமல் அப்படத்தில் வரும் நண்பர்கள் குழு சுற்றுலாவுக்கு செல்வதை போல செல்கிறோம். இந்த வேலைகளை செய்யக்கூடாது, பொய் சொல்லக் கூடாது, சாஸ்திரங்களை மீறக்கூடாது, மீறினால் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி பாவங்களை சேர்த்துகொண்டே போவோம் என்று தெரிந்தும் பல விஷயங்களைச் செய்கிறோம் அல்லவா?

‘இது தடை செய்யப்பட்ட பகுதி, இங்கே செல்லாதீர்கள்’ என்ற அறிவிப்புப் பலகையை அப்படத்தில் வரும் நண்பர்கள் அலட்சியம் செய்து விட்டு, ‘சென்றுதான் பார்ப்போமே, அங்கேயிருந்து கொடைக்கானலின் மலை அழகை பார்க்க பிரமாதமாக இருக்கும் என்றும், உண்மையான குணா குகையே இதுதான் என்றும் கூறிக்கொண்டு செல்லக் கூடாத இடத்திற்குச் செல்வதைப் போல அல்லவா நாமும் செய்யக்கூடாத பாவச் செயல்களை, ‘என்ன ஆகிவிடப் போகிறது? யார் பார்க்கப் போகிறார்கள்’ என்று நினைத்து செய்துகொண்டே போகிறோம். நாம் செய்த அந்த கர்ம வினைகளின் பலனாலேயே நமக்கு வாழ்க்கையில் பல சறுக்கல்கள், தண்டனைகள் கிடைக்கின்றன.

குணா குகைக்குள் அப்படித்தான் ஒரு இளைஞர் மாட்டிகொண்டு விடுகிறார். அப்படி மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் இனி அவ்வளவுதான் நம்மால் தப்பித்து வெளியே வரவே முடியாது என்று நினைத்திருந்தால் அவரது வாழ்க்கையும் அந்தப் படமும் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால், அந்த இளைஞர் தனது நண்பர்கள் தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையை கைவிடாமல் அந்தக் குழியிலிருந்து குரல் எழுப்புகிறார். நாம் இருப்பதோ அதல பாதாளம். இங்கிருந்து குரல் எழுப்பினால் வெளியில் இருப்பவர்களுக்கு எப்படி கேட்கும் என்று நினைக்காமல் குரல் எழுப்பியதால் மட்டுமே அவர் மீட்கப்பட்டார்.

இதில் இருக்கும் ஆன்மிகப் பாடம் என்ன தெரியுமா? நாம் செய்த ஊழ்வினைகளால் நாம் வாழ்க்கையின் படுகுழுயில் பல சமயங்களில் தள்ளப்பட்டிருப்போம். ஆனால், அப்படித் தள்ளப்பட்ட பின், இனி என்னால் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது, மீண்டு வரவே முடியாது என்று எண்ணாமல் இறைவனை நோக்கி பிரார்த்தனை எனும் கூக்குரல் கொடுக்க வேண்டும்.

நம் பிரார்த்தனை என்பது இறைவனுக்கு எப்படிக் கேட்கும்? அது எப்படி இறைவனை சென்றடையும் என்றெல்லாம் எண்ணாமல், ‘இறைவா நான் தவறு செய்து விட்டேன்… அதனால் வாழ்க்கையின் படுகுழியில் விழுந்து விட்டேன். தயவு செய்து என்னை மீட்டுக் கொண்டு வா’ என்று இறைஞ்ச வேண்டும். அதுவும் எப்படி அழைக்க வேண்டும் தெரியுமா? முதலில் குருவின் திருவடியை அடைந்து, மனதளவில் குருவிற்கு சரணாகதி செய்து அவரது உதவியை நாட வேண்டும். குருவின் திருவருள் இருந்தால் மட்டுமே இறை அருள் என்பது நமக்குக் கிடைக்கும். குரு சொன்னால்தான் இறைவனே நமக்கு உதவியும், அருளும் புரிவார்.

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் கிடைக்கும் புத்துணர்ச்சிக்குக் காரணம் தெரியுமா?
A spiritual lesson taught by 'Manjummal Boys'

இப்படத்தில் கூட அப்படித்தான் குழியில் இறங்கி அந்த இளைஞரை மீட்க யாருமே முன்வராதபோது ஒரே ஒரு நண்பர் மட்டும், ‘நான் இறங்குகிறேன்’ என்று தைரியமாக இறங்குவார். அப்படி நமக்காக, நம் கூக்குரலுக்காக முதலில் இறங்கி வருபவர் நம் குருதான். அப்படி அந்த குருவே உதவி செய்ய இறங்கும்போது மற்ற சக்திகள் எல்லாம் நாங்களும் உதவி செய்கிறோம் என்றே வருவார்கள். குருவின் திருவடியை பிடித்து விட்டால் பின் கவலை ஏது? நமக்காக மனமிரங்கி குருவே உதவி செய்ய வரும்போது, அவரது பரிந்துரையாலே தெய்வங்கள் எல்லாமும் நமக்கு உதவி செய்யும். அப்படித்தான் அந்தப் படத்திலும் அந்த நண்பர் துணிவோடு குழியில் இறங்கி உதவி செய்ய முற்பட்டபோது மற்றவர்களும் அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து முயற்சியை வெற்றியாக்குகிறார்கள்.

வாழ்க்கையில் துன்பங்களோ, குழப்பங்களோ வந்து நம்மை அழுத்தித் தள்ளும்போது ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்வோம். குருவின் திருவடியை நினைத்துக் கொள்வோம். அவர் உதவியால், அவர் கருணையால், அவரின் பரிந்துரையால் நமக்கு தெய்வங்களின் துணை என்பதும் அருள் என்பதும் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்பி தெய்வத்தை நோக்கி, குருவை நோக்கி நம் குறைகளை சொல்லுவோம். குறைகளைக் களையும் வித்தைகள் அறிந்த குரு (ஆசார்யன்) நம்மை காப்பாற்றியே தீருவார் என்பதே உறுதி. மஞ்சும்மல் பாய்ஸ் இறுதியாக, உறுதியாக நமக்கு உணர்த்துவதும் இதுவே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com