‘கொளுத்தும் வெயிலில் ஜில்லுனு ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும்’ என்று அனைவருமே விரும்புவோம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ருசிக்க விரும்பும் ஒன்று ஐஸ்கிரீம் வகைகள். ஆனால், சிலருக்கு, ‘வெயில் நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடித்து விடுமோ’ என்ற சந்தேகம் உண்டு. இந்த அச்சம் காரணமாக குழந்தைகளுக்குக் கூட ஐஸ்கிரீமை தவிர்ப்பது உண்டு. ஆனால், ஐஸ்கிரீம் சாப்பிடும் அந்த நேரத்தில் நம் முகத்திலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவது நாம் அறிந்ததே. ‘ஐஸ்கிரீம் உடலுக்கும் மனதுக்கும் எதனால் புத்துணர்வைத் தருகிறது?’ என்பதை நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா?
நமக்குப் பிடித்த சில உணவுகளை உண்ணும்போது மன மகிழ்ச்சிக்கு உதவும், ‘ஃபீல் -குட் ஹார்மோன்கள்’ என்று கூறப்படும் நன்மை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். ஐஸ்கிரீம் சாப்பிடும்பொழுது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும், ‘செரடோனின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தை உண்டாக்கும் ‘கார்டிசால்' என்ற ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி உடலுக்கு உடனடி புத்துணர்வைத் தருகிறது. எனவேதான், ஐஸ்கிரீம் சாப்பிடும் போதெல்லாம் நம்மால் மகிழ்ச்சியாக உணர முடிகிறது.
ஐஸ்கிரீம் குளிர்ச்சியான உணவு என்பதால் அது நரம்புகளை பாதிக்கும் என்று சொல்வதுண்டு. அதேசமயம் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பலவிதமான ஆய்வுகளை பல நாடுகளில் மேற்கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் மூளையின் திறன் மற்றும் செயல்பாடு சுறுசுறுப்பாகி அறிவு தூண்டப்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும், ஐஸ்கிரீம் சாப்பிடாதவர்களை விட, ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருப்பது. ஐஸ்கிரீம் ஃபெர்மெண்ட் செய்யப்பட்ட உணவு என்பதால் நம் செரிமானத்திற்கு ஏற்றது. அது மட்டுமில்லாமல், குளிர்ச்சியான உணவை சாப்பிடும்பொழுது இயற்கையாகவே உடல் வலிமை பெறுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மேலும், உடல் ஆரோக்கியத்துக்கு எலும்புகளின் உறுதி எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். கால்சியம் சத்து ஐஸ்கிரீமில் அதிகம் இருப்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கின்றது. ஐஸ்கிரீமில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. எனவே, இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், குளிர்ச்சியான ஐஸ்கிரீமை சாப்பிடும்போது ஏற்கெனவே நம் உடலில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலையை மாற்றி, சாதாரண தட்ப வெப்ப நிலைக்கு கொண்டு வருவதற்கு உடல் கூடுதல் கலோரிகளை எரிக்கத் துவங்கும் என்பதால் பாலன்ஸ் கலோரியில் எடை குறைய உதவும் வாய்ப்பு அதிகம்.
ஐஸ்கிரீம் பெரும்பாலும் பாலில் இருந்துதான் தயார் செய்யப்படுகின்றன. இதனால் இதில் உடல் நலனுக்கு ஏற்ற வைட்டமின்களும் கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆகவே, ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்பது தவறான கருத்து ஆகும். ஐஸ்கிரீம் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால், அதேசமயம் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டும் குளிர்ச்சியான ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீமில் பால் மற்றும் சர்க்கரை சத்து இருப்பதால் வெயில் தாக்கத்தால் இழந்த சத்துகளை மீட்டு உடனடியாக உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. எனவே, வெயில் களைப்பில் சோர்வாக இருந்தால் நமக்குப் பிடித்த ஒரு கப் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் எந்தத் தவறும் இல்லை. அதே நேரம் இதில் அதிக கலோரி உள்ளது என்பதால் அளவோடு சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லது.