திருநெல்வேலி மாவட்டம், உவரியில் அமைந்துள்ளது சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயில். கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணியத் தலமாக இது விளங்குகிறது. அலையாடும் கடலோரத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் கம்பீரமாக, சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார் மூலவர் சிவபெருமான். முற்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மணல் குன்றுகளாகவும் கடம்ப கொடிகள் அதிக அளவில் வளர்ந்து கடம்ப வனமாகவும் இருந்திருக்கிறது.
பொதுவாக, சிவன் கோயில்களில் சூரிய பூஜை ஓரிரு நாட்கள் நடைபெறும். ஆனால், உவரி சுயம்பு லிங்க சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் காலையில் இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது. அதாவது, மார்கழி மாதம் முழுவதும் இந்த தலத்தில் உள்ள சுயம்பு லிங்க சுவாமியை சூரிய பகவான் வழிபடுகிறார். சூரிய திசை நடக்கக்கூடியவர்கள் மார்கழி மாதம் அதிகாலையில் சுயம்பு லிங்கம் சுவாமி கோயிலுக்கு வந்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர் குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக தினமும் இந்தக் கடம்ப வனத்தின் வழியே சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் காலில் கடம்ப கொடி சிக்கி பால் முழுவதும் தரையில் கொட்டியது. இதேபோல் தினமும் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வந்தபோது கடம்பக் கொடி காலில் சிக்கி பால் கொட்டுவது வழக்கமாகியது. இது பற்றி பயத்துடன் அந்தப் பெண் தனது கணவரிடம் கூற, அந்தப் பெண்ணின் கணவர் ஆத்திரத்துடன் அந்தக் கடம்ப கொடியை வெட்டினார். அப்போது அந்தக் கொடியிலிருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதையடுத்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அப்போது ஊர் பெரியவர் ஒருவர் சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார். ‘இரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் இரத்தம் வடிவது நின்று விடும்’ என்றார். ஆனால், சந்தனத்திற்கு எங்கே போவது என்று அனைவரும் திகைத்து நிற்க, அருள் வந்தவர் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் சொன்னபடியே குறிப்பிட்ட இடத்தில் சந்தன மரம் இருப்பதைக் கண்டு ஊர் மக்கள் வியப்படைந்தனர்.
பின்னர் அந்த மரத்தின் குச்சியை எடுத்து வந்து அரைத்து கடம்ப கொடியில் இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் பூசியதும் இரத்தம் வழிவது நின்றுபோனது. அந்த இடத்தில் பரம்பொருளான சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். அந்த சிவலிங்கத்தைச் சுற்றி மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து ஒரு கோயிலை எழுப்பினர். ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அவருக்கு சுயம்பு லிங்க சுவாமி என்றே பெயர் வைத்தனர்.
இவருக்கு தினமும் பாலபிஷேகமும் நான்கு வேளை பூஜையும் செய்து வந்தனர். சந்தனம் பூசியதும் இரத்தம் நின்று போனதால் இந்த ஆலயத்தில் இன்றும் இறைவனுக்கு சந்தனம் அரைத்து பூசப்படுகிறது. அதோடு, இத்தல இறைவனை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி முழுவதும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். இதனால் தீராத நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை. சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்தவும் செய்கிறார்கள்.
உவரி சுயம்பு லிங்க சுவாமியை வழிபட்டு ஒரு காரியத்தைத் தொடங்கினால் தொட்டதெல்லாம் துவங்கும் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களின் நம்பிக்கை. இங்கு ஏராளமானவர்கள் கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதாவது, வேண்டுதல் நிறைவேற ஓலை பெட்டியில் கடலின் உள்ளே இருந்து மண் எடுத்து கடற்கரையில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இப்படிச் செய்தால் மண் தொடர்பான தோஷம் விலகும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், புற்று நோய் அகலவும், செய்வினை கோளாறு நீங்கவும், நாகதோஷம் விலகவும், மாங்கல்ய பாக்கியம் கூடி வரவும் இக்கோயிலில் வழிபாடுகள் உள்ளன.
நெல்லை மாவட்டம், தென்கோடியில் திசையன்விளையிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் உவரி திருக்கோயிலை அடையலாம்.