
சிவபெருமான் அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம். வில்வத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ இலைகளும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை சூரியன் உதிப்பதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம். வில்வத்திற்கு நிர்மால்யம் கிடையாது என்பதால் சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்து விட்டு பூஜைக்குப் பயன்படுத்தலாம். தினமும் சிவபெருமானுக்கு வில்வத்தைச் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, ஈசனுக்கு வில்வம் சாத்தி தரிசித்தால் அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு பிரியமான இலை வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால்கூட அது லட்சம் சொர்ண புஷ்பத்துக்கு சமம் ஆகும். வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தி உள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்கோணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
ஊழிக் காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள், தாங்கள் அழியாத இருக்க என்ன வழி என ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வ மரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வாரண்யம் என சிறப்புப் பெயர் பெற்றது.
வில்வ மரத்தை வீட்டிலும் திருக்கோயில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்பணித்தால் கூட சகல பாவங்களும் துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்குத் தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் பறிக்கக் கூடாது. மேலும், இந்த நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறு மாதம் வரை வைத்து பூஜை செய்யலாம். ஏற்கெனவே பூஜித்த வில்வத்தாலும் பூஜை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தர வல்லது.
சிவனுக்குப் பிரியமான வில்வார்ச்சனை மூலம் சிவனின் அருட்கடாட்சத்தைப் பெற முடியும். வில்வ மரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் வில்வ மரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகம் இல்லை. மேலும், எம பயம் ஒருபோதும் வராது.
வில்வ இலையை பறிக்கும்போது பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனதில் மானசீகமாக நினைத்து எண்ணிக்கொண்டு பறிக்க வேண்டும்.
வில்வம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது அவளுடைய கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் ஆகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவ ரூபம். வேர்கள் கோடி ருத்ரர்கள். ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது லட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் வில்வ மரம் வைத்து வளர்ப்பதனால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலன் உண்டாகும்.
திருவையாறு, திருப்பெரும்பூர், ராமேஸ்வரம் அருகே முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும். இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் தன்மை உடையது. வில்வம் கொண்டு சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும். சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான். வில்வம் சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படுகிறது.