
ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பாவம் தீர, ஸ்ரீராமன் வழிபட்ட இடம் தலம். அம்பாள் பர்வதவர்த்தினி. ஈசனின் திருநாமம் இராமநாத சுவாமி. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட, பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காசிக்கு நிகராகப் போற்றப்படும் ராமேஸ்வரம் கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அக்னியின் சூடு அந்த அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டார் என்றும், அந்த கடல்தான் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.
சீதை அமைத்த மணல் லிங்கம்: இக்கோயிலில் பல லிங்கங்கள் இருந்தாலும், சீதை அமைத்த மணல் லிங்கம், ஸ்படிக லிங்கம், காசி லிங்கம் மற்றும் உப்பு லிங்கம் ஆகிய நான்கும் அற்புத லிங்கங்களாக விளங்குகின்றன. சக்தி பீடங்களில் ஒன்றான பர்வதவர்த்தினி அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. சீதை அமைத்த மணல் லிங்கம்தான் இந்தக் கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.
காசி லிங்கம்: ராவணனை வதம் செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார் ஸ்ரீராமர். ஸ்ரீராமரின் ஆணைக்கிணங்க காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம்தான் இந்த காசிலிங்கம். இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் இது அமைந்துள்ளது.
ஸ்படிக லிங்கம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆதிசங்கரரால் கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இதற்கு தினமும் காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
அஷ்ட லவணங்களால் அமைக்கப்பட்ட உப்பு லிங்கம்: ‘லவணம்’ என்றால் உப்பு. அஷ்ட லவணம் என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்களிலிருந்து சாறு எடுத்து பின்பு அவற்றை உப்பு படிகங்களாக மாற்றி அமைக்கப்பட்டது இந்த லிங்கம். காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராமலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம், அது தவிர அபூர்வமான பாஸ்கர்ராயர் உருவாக்கிய உப்பு லிங்கமும் உள்ளது.
உப்பு லிங்கத்திற்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டாலும் பெரும்பாலான பக்தர்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஒரு சமயம், ‘கருவறையில் உள்ள மணல் லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி செய்திருந்தால் அபிஷேகம் செய்யும்போது கரைந்து போயிருக்கும்’ என்ற வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த பாஸ்கர்ராயர் என்ற அம்பாள் உபாசகர், ‘இது மணலால்தான் செய்யப்பட்டது’ என்று வாதம் செய்ய, மற்றவர்கள் அதை நம்ப மறுத்தனர்.
அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்கு உப்பு வாங்கி வரச் செய்து அதில் சிவலிங்கம் ஒன்றை செய்து பிரதிஷ்டை செய்தார். அத்துடன் அதற்கு அபிஷேகமும் செய்து காண்பிக்க, அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. உப்பு என்றால் கடல் உப்பு அல்ல. நவபாஷாணம் என்பது போல், ‘அஷ்ட லவணம்’ என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உப்புக்கட்டே இந்த லிங்கமாகும். நவபாஷாணம் போன்றே அஷ்ட லவணங்களால் செய்யப்பட்ட சிலைகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. இன்றும் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. வலிமைமிக்க இந்த லிங்கத்திற்கு 'வஜ்ராயுத லிங்கம்' என்று பெயர். இதனை தரிசிக்க நோய் தீர்ந்து மனம் மற்றும் உடல் பலம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.