
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் காரியத் தடை என்பது ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்கு தொழில் தடை, சில பேருக்கு நல்ல வேலை கிடைப்பதில் தடை, இன்னும் சில பேருக்கு செய்யக்கூடிய வேலையிலேயே பிரச்னைகளை அனுபவித்து வருவார்கள். இன்னும் சிலருக்கு படிப்பதில் ஆர்வம் இருக்காது, கல்வி தடை இருக்கும். சில பேருக்கு வீடு கட்டுவதில் தடை இருக்கலாம், சிலக்கு பேருக்கு சொத்து சுகம் வாங்குவதில் தடை இருக்கலாம். சிலர் அடமானத்தில் நகையை வைத்துவிட்டு அதை மீட்க முடியாமல் தவிப்பர்.
இப்படி ஒருவருடைய வாழ்க்கையில் எந்த நல்ல காரியம் தடைபட்டு நிற்கிறதோ அந்தக் காரியத் தடையை உடைக்க விநாயகரை முறைப்படி கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி காரியம் நல்லபடியாக நடக்கும்.
காரியத் தடையை நீக்கும் விநாயகர் வழிபாடு:
தினமும் காலையில் வீட்டில் இருந்தபடியே விநாயகர் திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட வேண்டும். விநாயகரை மனதார நினைத்து கொஞ்சம் உதிரியாக இருக்கும் அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்துகொண்டே,
‘ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித
ஸ்ரீ கஜானனாய நமஹ’
எனும் மந்திரத்தை சொல்ல வேண்டும். மிகவும் எளிமையான இந்த மந்திரம் இரண்டு வரியில்தான் உள்ளது. தொடர்ந்து 21 நாட்கள் விநாயகரை வழிபட்டு இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவந்தால் எவ்வளவு பெரிய காரியத் தடையும் உங்களை விட்டு விலகி விடும். பிறகு நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியடையும்.
இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் அமர்ந்து செய்யலாம். அல்லது சரி வர சொல்ல முடியவில்லை என்றால், காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அங்கு ஒரு மண் அகலில் விளக்கு ஏற்றி வைத்து பிள்ளையார் கோயிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது.
உங்களுக்கு எந்தக் காரியம் தடைபட்டாலும், அந்தக் காரியத் தடையை விலக்க இந்த மந்திரம் உதவி செய்யும். சிலர் வீட்டில் திருமணத் தடை இருக்கும். அந்தத் தடையை தகர்த்தவும் இந்த மந்திரம் கை கொடுக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பலருக்கு இந்த மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். நோய் நொடி உள்ளவர்கள் கூட இந்த மந்திரத்தை உச்சரித்து, உடம்பில் இருக்கும் நோயை குணமாக்கலாம். 21 நாள் 21 முறை இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். பிறகு வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றத்தைக் காணுங்கள். விநாயகர் அருளாசியால் தடைப்பட்ட அனைத்தும் நீங்கும்.