
அரணாக்கயிறு என்பதே அநேகருக்கு மறந்து போயிருக்கும் விஷயமாகும். இளைய சந்ததியினருக்கோ, அரைகுறையாகத் தெரியும். ஆனால், நினைவிருப்பதில்லை. அரணாக்கயிறு என்பது சிறு குழந்தைக்கு, அரை இடுப்பில் கட்டக்கூடிய ஒரு கயிறாகும். அன்றைய காலகட்டத்தில், குழந்தை பிறந்த ஏழாம் நாளே அரணாக்கயிற்றினைக் கட்டி விடும் பழக்கம் பல குடும்பங்களில் இருந்தது. பெரியவர்கள் இருக்கும் வீடுகளில், கிராமப் புறங்களில் இன்றும் இந்த வழக்கம் உள்ளது.
அரணாக்கயிறு, அரைஞாண் கயிறு, இடுப்புக் கயிறு என்று கூறப்படும் கயிறு, ஆதிகாலம் தொட்டே மனிதர்களின் அரை இடுப்பில் கட்டப்படுவதாகும். அன்றைய காலகட்டத்தில், மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள், மரம் ஏறுபவர்கள் போன்றவர்களின் அடிப்படை ஆடையைக் கட்ட ஆதாரமாக விளங்கியது அரணாக்கயிறு.
இடுப்பு எலும்புப் பகுதிக்கு ‘கூபக அறை’ என்று பெயருண்டு. ‘ஞாண்’ என்ற கயிற்றினால் இடுப்பினை வளைத்துக் கட்டுவதே அரணாக் கயிறாகும். அரணாக்கயிறு உடலிற்கு அரண் மாதிரி செயல்படும். எப்படியென்றால் மரம் ஏறுகையில், மிகவும் குதிக்கையில், உடலைப் பாதுகாத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
அரணாக்கயிறு தென்னிந்தியாவில் மதம் மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட ஒரு அரை இடுப்பு நூலாகும். பெரும்பாலும் பருத்தி அல்லது பட்டு மூலம் தயாரிக்கப்படும் அரணாக்கயிறு, தீய சக்திகளின் பாதகமான விளைவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. மேலும், பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவர் நிர்வாணமாக இருக்கக்கூடாது என்கிற கருத்தை அரணாக்கயிறு விளக்குகிறது.
குழந்தையாக இருக்கையில் கட்டப்பட்ட கயிறை, வளர்கையில் எடுப்பது கூடாது. மனிதன் இறந்த பின் நீக்கி விடவேண்டும். இதைப் பெண்கள் அணிவது மிகவும் குறைவு. பலருடைய அரணாக்கயிற்றில், சிறிய ஆலிலைக் கிருஷ்ணர் டாலர் கட்டப்பட்டிருக்கும். மனித வாழ்வியலோடு தொடர்பு கொண்ட அரணாக்கயிற்றின் கறுப்பு நிறம் தவிர்த்து சிலர் சிவப்பு நிறத்திலும், சிலர் கணுக்காலிலும் கட்டும் வழக்கம் வந்து விட்டது.
மகாபாரதத்தில் அரணாக்கயிறு செய்த மாயம்:
பிறவிக் குருடராகிய திருதராஷ்டிர மன்னரின் மனைவி காந்தாரி பதிபக்தி காரணமாக, தன்னுடைய இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு குருடாகவே வாழ்ந்து வந்தாள். உயர்ந்த பக்தியினால் அநேக சக்திகளைப் பெற்றவர் காந்தாரி. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருக்ஷேத்திர யுத்தம் சமயம், மகன் துரியோதனனின் உடல் வலிமையை அதிகப்படுத்த எண்ணினாள் காந்தாரி. துரியோதனனை ஆடையின்றி தன் முன் வருமாறு கூறினாள்.
அவ்வாறே துரியோதனனும் வருகையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வழியில் குறுக்கிட்டு, ‘பெற்ற தாயாரே ஆனாலும், வளர்ந்த மகனாகிய நீ இப்படி செல்லலாமா?’ என்று பரிகசித்தவாறே, துரியோதனனின் அரை இடுப்பில் சடக்கென ஒரு அரணாக்கயிறைக் கட்டி விட்டார்.
காந்தாரி முன்பு துரியோதனன் வர, அவள் தனது கண் கட்டினை அவிழ்த்து தன்னுடைய தீர்க்கமான பார்வையால், மகனின் தலையிலிருந்து மெதுவாக பார்த்துக்கொண்டு சக்தியை அளித்தவாறு வந்தாள். அச்சமயம் துரியோதனன் இடையில் கட்டியிருந்த அரைஞாண் கயிறு காந்தாரியின் கண்களில் பட, தொடர்ந்து சக்தியை அளிக்க முடியாமல் தடைப்பட்டுப்போனது.
குருக்ஷேத்திரப் போரில், பீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தலை, மார்பு, கை என்று அடித்தும் அவனை வீழ்த்த இயலவில்லை. அப்போது கிருஷ்ண பரமாத்மா காட்டிய சமிக்ஞையால் பீமன், துரியோதனனின் தொடையில் ஓங்கி அடிக்க, வீழ்ந்தான் துரியோதனன். காரணம், அரணாக்கயிறு துரியோதனன் இடுப்பில் கட்டப்பட்டிருந்ததால், இடுப்பிற்கு கீழே அவனுக்கு, தாயார் காந்தாரியின் சக்தி கிடைக்கவில்லை. அரணாக்கயிற்றின் மகிமையே மகிமை.
குழந்தைகளுக்கு, அதுவும் குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு அரணாக்கயிறு கட்டுவது மிகவும் முக்கியம்.