ஆடி 1: தேங்காய் சுடும் விழாவுக்கும் மகாபாரதப் போருக்கும் என்ன தொடர்பு?

Coconut Roasting Festival
Coconut Roasting Festival
Published on

தமிழ்நாட்டின் காவிரி, அமராவதி உள்ளிட்ட பல ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுகின்ற விழாக்களில் ஆடி 1 ஆம் நாளில் தேங்காய் சுடும் விழா. குறிப்பாக, கரூர், சேலம், மேட்டூர், ஈரோடு, நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா குறித்த சுவையான தகவல்களை தெரிவிக்கிறது இப்பதிவு.

இந்தத் தேங்காய் சுடும் விழா மகாபாரதப் போருடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையிலான இப்போர் ஆடி மாதம் 1 அன்று தொடங்கி ஆடி மாதம் 18 அன்று முடிவுக்கு வந்தது. 18 நாட்கள் நடைபெற்ற இப்போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக, ஆடி 1 ஆம் நாளன்று, அனைத்து மக்களும் விநாயகர் உள்ளிட்ட, அவரவர் விருப்பக் கடவுள்களை வேண்டி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் தேங்காய் சுட்டு வழிபாடு செய்யப்பட்டது.

முற்றிய தேங்காயின் கண்களைத் திறந்து அதிலுள்ள நீரை அகற்றிய பின்னர், அதில் பொட்டுக்கடலை, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் இந்த தேங்காயைச் சொருகி தீயில் வாட்டி, சுட்டு பின் சாப்பிட்டு மகிழ்கின்றனர். தேங்காயை உரித்து சுத்தம் செய்து மஞ்சள் தடவி, துளையிட்டு, அதில் உள்ள தேங்காய் நீரை எடுத்ததும், ஊற வைத்த பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பொட்டுக்கடலை, எள், வறுத்த பாசிப்பருப்பு போன்றவற்றை அரைத்து அதனைத் தேங்காயில் போட்டு சுடுவதும் உண்டு.

இதையும் படியுங்கள்:
மன்னனுக்கு மகனாக இருந்து சிவபெருமான் திதி கொடுக்கும் வரலாறு தெரியுமா?
Coconut Roasting Festival

இந்தப் பூசையானது பெரும்பான்மையாக, விநாயகர் கோயிலிலேயே நடத்தப்படுகிறது. சுடப்பட்ட தேங்காயை விநாயகருக்குப் படைத்து, வழிபட்ட பின்பு, அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பகிர்ந்து உண்கின்றனர். 

பொதுவாக, புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு, அங்கு நல்ல எண்ணங்களை விதைத்து சுவையான வாழ்வினைத் தொடங்கவும், விவசாயம் செழிப்பாக அமையவும், செல்வம் பெருகவும், ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com