
முருகப்பெருமானின் ஆயுதமான வேல் தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் முருகனின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. கோயில்களில் செய்யப்படும் வேல் வழிபாடு போலவே, வீடுகளிலும் சிறிய அளவில் வேல் வைத்து வழிபாடு செய்வது பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. முருகனுக்குரிய வேல் வழிபாட்டை நமது இல்லங்களில் செய்யும் முறை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முருகனின் அம்சமாகவே இருக்கும் வேல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் முருகன் கோயில் அல்லது அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றில் விற்கப்படும் பஞ்சலோகத்திலான சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கி அந்த வேல் வாங்கிய முருகப்பெருமான் தலத்திலேயே சிறிய வேலாயுதத்தை உங்கள் கையில் வைத்திருந்தபடி முருகப்பெருமானை வழிபட்டு வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்பு ஒரு சிவப்பு நிற புதிய துணியை விரித்து அதன் மீது ஒரு வெள்ளி கிண்ணம் அல்லது பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் புதிய பச்சரிசியை நிரப்பி அந்த வேலை அதில் நட்டு வைக்க வேண்டும்.
முருகனுக்குரிய நாளான ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ அல்லது சுபமுகூர்த்த நாளிலோ நாம் பூஜையறையில் வைத்திருக்கும் வேலை கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து பின்பு அந்த வேலுக்கு காய்ச்சப்படாத சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு சாதாரண நீரைக் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்து தூய்மைப்படுத்தி அந்த வேலை ஒரு தூய்மையான துணியால் துடைத்து மீண்டும் வெள்ளி கிண்ணத்தில் புதிய பச்சரிசியை போட்டு நிரப்பி அதில் முன்பு போலவே நட்டு வைக்க வேண்டும்.
இதன் பிறகு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமத்தை அந்த வேலின் இரண்டு பக்கமும் பொட்டு வைத்து அதன் மீது வாசமுள்ள விபூதியை அபிஷேகப் பொடி போன்று தூவி விட வேண்டும். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு முன்பு போல முருகனின் வேல் இருக்கும் கிண்ணத்தில் முருகனுக்கு விருப்பமான பன்னீர் ரோஜா மற்றும் செவ்வரளி பூக்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
கற்கண்டு, அவல், பொரிகடலை, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து தீப தூபம் காட்டி, முருகனுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.
மேற்கூறிய முறையில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை 21 நாட்கள் மனமுருகி வழிபாடு செய்ய, எத்தகைய பிரச்னைகளும் தீர்வதற்கான வழி பிறக்கும். தொழில், வியாபாரம் மற்றும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதோடு, செவ்வாய் தோஷத் தடையால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் திருமணப் பேறு கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகான, அறிவான குழந்தை கிடைக்க அருள்புரிவார் வேலவன். மேலும், நம் வீட்டையும் நம்மைச் சுற்றி பீடித்து இருக்கும் துஷ்ட சக்திகள் ஒழிந்து காரியத்தடை, தாமதங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.