
உத்திராயண புண்ணியகாலத்தின் முதல் அமாவாசை தை மாதம் வரும். அந்த அமாவாசை பித்ரு காரியங்களுக்கு மிகவும் உன்னதமான நாளாகும். அதேபோல, தட்சிணாயண புண்ணியகாலத்தின் முதல் அமாவாசை ஆடி அமாவாசையாகும். ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஆறு மாத காலம் அமாவாசை தர்ப்பணம் செய்த பலன் கிடைக்குமாம். அதனால் மாதாமாதம் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய முடியதவர்கள் கூட ஆடி அமாவாசையன்று கட்டாயமாக பித்ரு தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும்.
ஆடி மாதம் தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகும். தட்சிணாயணத்தின் முதல் அமாவாசை ஆடி அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த அமாவாசை என்று கருதப்படுகிறது.
ஆடி அமாவசையன்று வீட்டில் புரோகிதர் வைத்தும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் அல்லது தீர்த்தக்கரைகளுக்குச் சென்றும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம். ஆடி அமாவாசைக்கு வழக்கமாக காசி, ராமேஸ்வரம் சென்று வருடா வருடம் தர்ப்பணம் செய்பவர்கள் கூட இருக்கிறார்கள். காவிரிக் கரையில், திருச்சி அம்மா மண்டபம் போன்ற ஆற்றங்கரைகளில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பதைக் காணலாம்.
ஆடி அமாவாசையன்று காகம் போன்ற பறவைகள், பசு போன்ற விலங்குகளுக்கு உணவளிக்கலாம். அன்று விரதம் இருந்து சிவன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அங்கே நம் முன்னோர்களை நினைத்துக்கொண்டு அவர்களுக்கென்று தனியாக ஒரு விளக்கு ஏற்றி வழிபடலாம். இது அவர்களுக்கு நற்கதியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
முடிந்தவர்கள் நெல்லை அருகே முறப்பநாட்டில் இருக்கக்கூடிய தட்சிண காசி எனப்படும் கைலாசநாதர் கோயிலில் சென்று அங்கே அருகேயுள்ள ஆற்றில் திதி கொடுக்கலாம். இங்கே ஸ்ரீராமர் அவரே தனது கையால் ஜடாயுவிற்கு தர்ப்பணம் கொடுத்ததால் இங்கே தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இங்கேயுள்ள ஸ்ரீராமர் கையில் பிண்டத்தோடு காட்சியளிப்பார்.
மிகவும் வயதானவர்கள், உடம்பு முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட்டுவிட்டு பிறகு சூரிய பகவானை நோக்கி வணங்க வேண்டும்.
சில குடும்பங்களில் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு, அவர்களின் படங்களின் முன்பு நுனி வாழையிலை போட்டு அன்று தயாரித்த உணவு வகைகளை படையலாக வைப்பது வழக்கம். சிலர் புதிய ஆடைகள் கூட வைப்பார்கள். படையலிட்ட உணவை பசுவிற்கோ, காகத்திற்கோ கொடுத்து விடுவார்கள். புத்தாடைகளை வீட்டில் உள்ளவர்களே அணிந்து கொள்வார்கள். யாருக்கு எப்படிப் பழக்கமோ அப்படிச் செய்ய வேண்டும்.
இன்று ஆடி அமாவாசை தினம். தாய், தந்தையர் இல்லாதவர்கள் எல்லோரும் நிச்சயமாக இன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.