
ஆடி மாதத்தில் எந்தளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்தளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்பத்தில் பல நலன்களைப் பெற முடியும். வம்சத்திற்கும் கஷ்டம் ஏற்படாமல் காக்க முடியும். ஆடி மாதம் என்றாலே தெய்வீக மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு மாவிளக்குப் போடுதல், கூழ் வார்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மாவிளக்கு என்பது பச்சரிசியை மாவாக அரைத்து வெல்லம் மற்றும் நெய் சேர்த்து விளக்கு போல் செய்து அதில் தீபம் ஏற்றுவதாகும். தெய்வ சன்னிதி மற்றும் வீட்டில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் இருக்கிறது. பச்சரிசி மாவு, வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களை ஒன்றாக சேர்த்து அதில் சிறிது நெய் சேர்த்து மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழையிலை நடுவில் பரப்பி அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி அம்மன் சன்னிதியில் வைத்து பிரதட்சணம் செய்து நமஸ்காரம் செய்து வேண்டிக்கொள்வதே, 'மாவிளக்கு போடுதல் 'என்று கூறப்படுகிறது.
குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கும், அம்மனுக்கும் மாவிளக்கு போட்டுப் பிரார்த்தித்துக்கொள்வதால் அந்த நிகழ்ச்சிகள் தடங்கலின்றி சுபமாக நடைபெறும். மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ சன்னிதியிலோ அல்லது வீட்டிலோ நல்ல நாள் பார்த்து உரலிலோ அல்லது மிக்ஸியிலோ பச்சரிசி மாவை தயார் செய்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அம்பாள் சன்னிதியிலோ அல்லது வீட்டிலோ மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் மழைக்காலம் என்பதால் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டால் மழை பொழியும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் அம்மன் உக்கிரமாக இருக்கும் மாதம் என்பதால் மாவிளக்கு போட்டு வழிபட்டால் அம்மனின் மனம் குளிர்ந்து அருள் கிடைக்கும். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு போடுவதால் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். குலதெய்வ மாவிளக்கு வழிபாடு தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதும் நம்பிக்கை.
மாவிளக்கு வழிபாடு செய்யும்போது அம்மன் பாடல்களைப் பாடியும், விரதம் இருந்தும் தீபம் ஏற்றி வழிபட்டு பழங்கள், பூக்கள் போன்றவற்றை படைத்தும் வழிபட்டு அம்மனின் அருளைப் பெறலாம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு மாவிளக்கு போடுவது ஒரு சிறப்பான வழிபாடாகும். இதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
உயிர் வாழ அடிப்படையான அரிசி மாவில் இனிமையான வெல்லத்தையும் மணம் தரும் ஏலக்காயையும் சேர்த்து, மாவிளக்கில் இடப்படும் நெய்யில் அக்னி பகவானின் சக்தி அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமான அம்பிகை நமது வீடுகளில் குடியேற வேண்டும் என்பதற்காகவே மாவிளக்கு வழிபாடு உருவானது. ஆடி வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றுவதால் இல்லத்தில் மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியத்துடன் தீராத கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.